முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி,நேற்று (10) முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதான வாயிலை முற்றுகையிட்டு முல்லைத்தீவு மீனவர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் பகுதியில் பருவகால மீன்பிடிக்காக வருகைதந்துள்ள தென்னிலங்கை மீனவர்களாலும், ஏனைய சிலராலும் சுருக்குவலை, வெளிச்சம்பாய்சி மீன்பிடித்தல், வெடிவைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட பல சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் மேறகொள்ளப்பட்டு வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளின் மூலம் கடல்வளங்கள் அழிக்கப்படுவதால், தமது தெழில் நிலைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவுமாவட்ட கடற்றொழிலாளர்கள் இதன்போது கவலை தெரிவித்தனர்.
எனவே இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை உடனடியாக கட்டுப்படுத்தித் தருமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரனிடம் மீனவர்களால் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், எதிர்வரும் (13)ஆம் திகதி இடம்பெறவுள்ள முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ஆராய்வதுடன், இந்த விடயம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர், கடற்படை அதிகாரிகள், மீனவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்றினை ஒழுங்குசெய்து குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாண தம்மால் நடவடிக்கை எடுக்கப்படுமென இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரனால் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
மேலும் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறும்போது கலகமடக்கும் பொலிசார், பொலிஸ் வாகனங்களில் ஏற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததையும் அவதானிக்கமுடிந்தது.