இலங்கையில் உள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படாமை தொடர்பில் தொழில் திணைக்களத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க மறுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, செந்தில் தொண்டமான் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்ட ஆயிரத்து 700 ரூபாய் சம்பளம் தமக்கு வழங்கப்படவில்லை என பல பெருந்தோட்ட தொழிலாளர்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.
கடந்த மாதத்துக்கான சம்பளம் ஆயிரம் ரூபாவாக வழங்கப்பட்டதாகவும், அதிகரிக்கப்பட்ட தொகையை அடுத்த மாத சம்பளத்துடன் வழங்குவதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் தெரிவித்தததாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில், தொழிலாளர்களுக்கான சம்பளத்தை வழங்க மறுத்த பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தான் தொழில் திணைக்களத்தை அறியப்படுத்தியுள்ளதாகவும் அரசாங்கத்தின் வர்த்தமானியை நடைமுறைப்படுத்த தவறிய நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.