சவூதி அரேபியாவிலுள்ள புனித நகரமான மக்கா, ஹஜ் யாத்திரிகர்களால் நிரம்பி வழிவதாக சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கடந்த 11 ஆம் திகதி வரை 15 இலட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவுக்கு வருகைத்தந்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், எதிர்வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு 18 இலட்சம் பேர் ஹஜ் யாத்திரையை மேற்கொண்டுள்ள நிலையில், இவ்வாண்டு அதைவிட அதிகமான யாத்ரீகர்கள் மக்காவிற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாக சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, புனித யாத்திரை நாளை (14) அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு இடையே நிலவும் போர் காரணமாக, காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் இவ்வாண்டு ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
எனினும், பலஸ்தீனத்தின் மேற்குக் கரையிலிருந்து சுமார் 4,200 பாலஸ்தீனியர்கள் சவூதி அரேபியா சென்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.