விடுதலைப்புலிகளுக்கு விற்கப்பட்ட பெறுமதியான காணிகள் மீண்டும் அதே நபர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாக கரைச்சி பிரதேச செயலாளர் ரி. முகுந்தன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற விசேட மாவட்ட அபிவிருத்தி கூட்டத்திலேயே அவர் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையாளபுரம் பகுதியில் செஞ்சோலை பிள்ளைகள் கொட்டகை அமைத்து வாழ்கிறார்கள். நான் யுத்தகாலத்திலும், அதற்கு பின்பும் பிரதேச செயலாளராக பணியாற்றுகிறேன்.
உண்மையில், காணி உரிமையாளர்கள் விடுதலைப்புலிகளுக்கு விற்பனை செய்துள்ளனர்.
செஞ்சோலை காணியும் அவ்வாறு விடுதலைப்புலிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. இது வெளிப்படையான உண்மை.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் விடுதலைப்புலிகளின் தளபதிகள், நிர்வாகங்கள் இடம்பெற்ற காணிகள் மீண்டும் முதல் உரிமையாளர்களால் கோரப்பட்டது.
அதற்கு அமைவாக பல பெறுமதியான காணிகள் உரிமை கோரியவர்களுக்கு வழங்கப்பட்டது.
அதே போல, செஞ்சோலை காணியும் விடுதலைப்புலிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் அங்கு வளர்ந்த பிள்ளைகள் வீடுகள், உறவுகள் இல்லாமல் அந்த காணியில் கொட்டகைகளை அமைத்து வாழ தொடங்கினர்.
உண்மையில் அவர்களின் நிலையும் கவலைக்குரியது. அவர்கள் வெளியேற்றப்படாமல் அதே இடத்தில் தொடர்ந்தும் இருக்கின்றனர். அவர்களுக்கான நீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நாங்கள் வழங்குவதற்கு தடுக்கவில்லை.
ஏனெனில், மலசலகூடம் மற்றும் நீர் அத்தியாவசிமானது என்பதால் ஒரு போதும் நாம் தடுக்கவில்லை.
ஆனாலும், நகர் உள்ளிட்ட பகுதியில் எவ்வாறு காணிகள் உரிமையாளர்களுக்கு இரண்டாம் தடவையும் வழங்கப்பட்டதோ, அது போல் குறித்த காணியும் வழங்க வேண்டும் என்ற நியாயமும் உள்ளது.
அதேவேளை, செஞ்சோலையில் வளர்ந்த பெற்றோர் இல்லாத அந்த குடும்பங்களின் நிலையையும் நாங்கள் கருத்தில் எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.