மொரகஹாஹேன மொரட்டவாவத்தையில் இரண்டு மாடி வீடொன்றில் இரத்தினக் கற்களைத்தேடி குழிதோண்டிய தொழிலதிபர் உட்பட மூவர் நேற்றுமுன்தினம் (13) இரவு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, அப்பிரிவினருடன் மொரகஹஹேன பொலிஸாரும் இணைந்து இதற்கான சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து தண்ணீர் தெளிக்கும் மோட்டார், 2 கல் நொருக்கும் இயந்திரங்கள், மண்வெட்டிகள், கம்பி வடங்கள் மற்றும் பலியிடும் பொருட்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.
குறித்த தொழிலதிபர் தான் கட்டிய வீட்டின் குளியலறைக்கருகில் உள்ள அறையில் இரத்தினக் கற்கள் இருப்பதாக ஜோதிடர் கூறியதாக பொலிஸார்; நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் ஜோதிடரை வீட்டிற்கு அழைத்து வந்து, குளியலறையின் பக்கத்து அறையின் நடுப்பகுதியில் குழி தோண்டியதாக விசாரணையில் தெரிந்துள்ளது.
நேற்றிரவு பொலிஸார் குறித்த இரண்டு மாடி வீட்டை சுற்றிவளைத்த போது அங்கு சந்தேகநபர்கள் மூவர் அந்த இடத்தில் குழி தோண்டியதை காணமுடிந்ததாகப் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.