வாடகை வீட்டில் வசிப்போரிடமிருந்து வீட்டின் உரிமையாளர் பெற்றுக்கொள்ளும் வருமானத்தை மதிப்பிட்டு, அதற்கு வரி அறவிடுவதற்கும், வசிக்கும் மற்றும் வசிக்காத குடியிருப்புக்களுக்கு வரி அறவிடுவதற்கும் சர்வதேச நாணய நிதியம் கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த யோசனை முன்வைத்துள்ளது. அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டுமாயின், இந்த வரி முறைமை முழுமையாக செயற்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், சொத்து உரிமையாளர்களிடம் உள்ள சொத்துக்கள் மற்றும் ஆதனங்கள் குறித்து நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மதிப்பீடுகள் உள்ளடக்கப்பட வேண்டும். இந்த தரவு கோப்பிடல் அல்லது களஞ்சியப்படுத்தல் முறைமை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் உருவாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் செயற்றிட்டத்தின் இரண்டாவது மீளாய்வினை தொடர்ந்து ‘ஐ.எம்.எப் கன்ட்றி ரிபோட் 24.161’ அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்ளும் வழிமுறையாக 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலாகும் வகையில் வசிக்கும் மற்றும் வசிக்காத குடியிருப்புக்களின் சொத்துகளுக்காக கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரி முறைமையை அறிமுகப்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்வதாயின் இவ்வாறான வரிகளை அமுல்படுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. இந்த வரி இலக்கை 2026ஆம் ஆண்டுக்குள் பூரணப்படுத்த இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும் நாணய நிதியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரி என்பது வீட்டின் உரிமையாளர் தனது வீட்டை வாடகை அடிப்படையில் வழங்குதாயின் அவருக்கு அதனூடாக கிடைக்கப்பெறும் வருமானத்தை மதிப்பிட்டு அதற்கான வரியை அறவிட வேண்டும். இந்த வரி வீட்டின் பெறுமதியை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படமாட்டாது. கிடைக்கப் பெறும் வருமானத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.
இந்த வரி முறைமையை அமுல்படுத்துவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் மட்டத்தில் தரவு கோப்பிடல் என்ற புதிய முறைமையை இலங்கை உருவாக்க வேண்டும். இந்த தரவு களஞ்சியப்படுத்தலில் சொத்து உரிமையாளர்களிடம் உள்ள சொத்துக்கள் மற்றும் ஆதனங்கள் குறித்து நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மதிப்பீடுகள் உள்ளடக்கப்பட வேண்டும். இந்த தரவு கோப்பிடல் அல்லது களஞ்சியப்படுத்தல் முறைமை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் உருவாக்கப்பட வேண்டும்.
இதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியம் அறிமுகப்படுத்த எதிர்பார்த்த ஆதன வரி மற்றும் சொத்து வரி முறைமையை நடைமுறைப்படுத்த பல்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சித்த போதும் அதற்கு பல தடைகள் ஏற்பட்ட நிலையில் தற்போது கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரி முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.