தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச் சென்று அந்நியசெலாவணியை எமது நாட்டிற்றுப்பெற்றுத் தருவோருக்கு வரிச்சலுகையில் வாகனங்களைப்பெற்றுக்கொள்வதற்கு அரசாஙத்தினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஐக்கிய இளைஞர் அமைப்பின் தேசியத்தலைவருமான சுதத் சந்திர சேகர தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் எமது நாடு வெளிநாடுகளிலிருந்து கடன்களைப்பெற்று மீளச்செலுத்த முடியாதுள்ள நிலையில் வெளிநாட்டு செலாவணியைப் பெற்றுத்தருவோரை அரசாங்கம் பெரும் வரமாக நினைப்பதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்திலிருந்து தென்கொரியாவிற்கு வேலைவாய்ப்பிற்காகச் செல்லவுள்ள இளைஞர்கள் தென்கொரிய மொழி கற்பிக்கும் ஏ.எல்.எம் இர்பானைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
ஏறாவூர் பிர்தௌஸ் பவுண்டேஷன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு டாக்டர் பதியுதீன் மஹ்மூத் பாடசாலை அதிபர் எம்எம். ஜலால்தீன் தலைமையில் நடைபெற்றது.
விரிவுரையாளர் இர்பான் கற்பித்த சுமார் நூறு இளைஞர்கள் அண்மையில் தென்கொரியாவிற்குச் சென்றுள்ளனர். மேலும் நூறு இளைஞர்கள் தற்போது கற்றுக்கொண்டிருக்கின்றனர். இன்னும் நூறு பேர் கற்பதற்கு விண்ணப்பம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தென்கொரிய மொழி விரிவுரையாளர் ஏஎல்எம். இர்பான் இங்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் கட்சியின் பிரசாரகருமான ஏஎம்எம். பிர்தௌஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.