திருடன் என்ற கருத்தும், திருடனைப் பிடித்து ஆட்சிக்கு வருவோம் என்ற கோஷமும் எதிர்வரும் காலங்களில் இல்லாதொழிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பியகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
”நாம் ஆட்சிக்கு வந்தவுடன் கிராமிய அலகுகளிலிருந்து கொழும்பு துறைமுக நகரம் வரை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவால் ஆரம்பிக்கப்பட்ட செயற்றிட்டங்கள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படும்.
அதற்கு தேவையான தலைமைத்துவம் எம்மிடம் உள்ளதோடு அவற்றை செயற்படுத்துதற்கான நல்ல தலைமைகளும் உள்ளன.
அதேவேளை, இலங்கை அரசியலால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் ஒரு கட்சியில் இருக்கும் போது அதனை விசாரித்தவர்களும் அதே கட்சியில் உள்ளனர். இதனால் மக்களோடு நாமும் குழப்பத்தில் உள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.