இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணைஅனுசரணை வழங்கிய நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 56 அமர்வில் கனடா மலாவி மொன்டிநீக்ரோ வடமசடோனியா ஐக்கிய இராச்சியம் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.
ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமை தூதுவர் ரிட்டா பிரென்ஞ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் மிக நீண்டகாலமாக காணப்படுவதை வெளிப்படுத்திய அவர், இலங்கையின் பலவந்தமாக காணாமல்போதல் குறித்த உங்கள் அறிக்கைக்கு நன்றி என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்பட்டதால் ஏற்பட்ட துயரங்களிற்கும், அதனால் அனைத்து சமூகங்களிற்கும் ஏற்பட்ட பாதிப்புகளிற்கும் தீர்வை காண்பதற்காக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையில் காணப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் உட்பட புதிய சட்டமூலம் எதுவும் அதன் மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்றுவதாக காணப்படவேண்டும், கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதாக காணப்படவேண்டும் என ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமை தூதுவர் ரிட்டா பிரென்ஞ் தெரிவித்துள்ளார்.
நீதித்துறையின் சுதந்திரத்தையும் நாட்டில் சட்ட அமைப்புகளின் சுதந்திரம் வெளிப்படை தன்மையையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகின்றோம் என குறிப்பிட்டுள்ள அவர் யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயங்களில் காணிகள் விடுவிக்கப்பட்டதை வரவேற்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் காணிகளை கைப்பற்றும் நடவடிக்கைகளால் பதற்ற நிலை காணப்படுவதாக வெளியான தகவல்களால் நாங்கள் கரிசனையடைந்துள்ளோம் என தெரிவித்துள்ள ஜெனீவா, தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கிய நாடுகள், கண்மூடித்தனமான கைதுகள் ,தேடுதல் நடவடிக்கைகள் ,பொலிஸாரின் நடவடிக்கைகளின் போது தடுத்துவைக்கப்படல் குறித்தும் கரிசனையடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் நிலைமாற்றுக்கால நீதிபொறிமுறைகள் சுயாதீனமானவையாக அனைவரையும் உள்வாங்குபவையாக பக்கச்சார்பற்றவையாக வெளிப்படைதன்மை மிக்கவையாக பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்பவையாக காணப்படுவதை உறுதி செய்யவேண்டும் எனவும் இணை அணுசரணை நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.