மீண்டும் கிழக்கில் துப்பாக்கிக் காலாச்சாரம் ஆரம்பமாகியுள்ளது எனவும், பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற முக்கியமாதொரு விவாதத்தின் போது மேற்படி கருத்தை முன்வைத்துள்ளார்.
மேலும் அவர்தெரிவிக்கையில்,, ” யுத்தத்தினால் கணவனை இழந்த இளம் பெண்களுக்கு புதியதொரு வேலைத்திட்டம் ஒன்றை கொண்டு வந்து அதன் ஊடாக வடக்கு கிழக்கில் இருக்கும் வாழ்வாதாரத்தை, கட்டியெழுப்பக் கூடிய எந்தவொரு வேலைத்திட்டத்தையும் இதுவரை பெண்கள் காண முடியாத சூழலே காணப்படுகிறது.
எங்களுடைய காணாமலாக்கப்பட்ட அந்த உறவுகள், பெண்கள் பல வருட காலங்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையிலே இவ்வாறான இந்த சட்ட மூலங்களை கொண்டு வருவதை போல, வடக்கு கிழக்கிலே இருக்கும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான விசேட திட்டமொன்றை வருங்காலங்களில் வரும் அரசாங்கங்களாவது முன்னெடுக்க வேண்டும்.
அத்துடன், முக்கியமாக கடந்த வாரத்தில் மட்டக்களப்பில் நடந்த அதுவும் ஒரு பெண் ஒருவரை குறி வைத்து இடம்பெற்ற சம்பவம் பற்றி இந்த சபையிலே சில விடயங்களை கூறலாம் என்று நினைக்கிறேன்.
14.06.2024ஆம் திகதி மட்டக்களப்பை சேர்ந்த சித்திக் ஷிபானி என்ற பெண் மீதான துப்பாக்கிச்சூட்டு இடம்பெற்றிருந்தது.
இது தொடர்பாக ஐந்து தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் இந்த இராணுவ புலனாய்வுத் துறையுடன் தொடர்புடைய ட்ரிப்பளி ப்ளடுன் குழுவினர் சம்பந்தப்பட்ட விடயங்கள், உயிர்த்தஞாயிறு குண்டு வெடிப்புக்கும் இந்த குழுவினருக்கும் என்னென்ன தொடர்புகள் இருந்தன? என்பதை பல நாட்களாக இந்த சபையில் நான் கூறி வருகிறேன்.
கடந்த நான்காம் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற உரையில் இதை பற்றி மிக விளக்கமாக குறிப்பிட்டு இருந்தேன்.
2008ஆம் ஆண்டு எவ்வாறு சாந்தன் என்ற தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினுடைய ஆரையம்பதி பொறுப்பாளர் எவ்வாறு சுடப்பட்டார்? அந்த சம்பவத்தின் பின்னணியில் காணப்பட்ட பொலிஸ் ஃபாயிஸ், மொஹமட் சயீத், குகன் என்ற நபர், அவர் தற்போது ஹுசைன் என்ற பெயரில் இஸ்லாமியராக மாறி இருக்கிறார்.
இந்த விளக்கங்களை மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இந்த விடயங்கள் தொடர்பாக இதுவரை எவ்வித விசாரணைகளும் ஆரம்பிக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் இன்று மீண்டும் காத்தான்குடியில் துப்பாக்கியை வைத்து ஒரு சம்பவம் இடம்பெற்று இருக்கிறது.
இந்த விடயத்தை பற்றிய முக்கியமாக சிங்களத்தில் கூறினால் தான் இந்த நாட்டில் இராணுவ புலனாய்வுத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த அரசாங்கம் எவ்வாறு பாதுகாப்பு வழங்குகிறது என்பதை சிங்கள சமூகம் அறியும்” என்றார்.