விண்ணில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்திய பிறகு மீண்டும் பாதுகாப்பாக தரைக்கு திரும்பி வரும் மறுபயன்பாட்டுக்கான ஏவுகலனை (ஆா்.எல்.வி) வெற்றிகரமாக இஸ்ரோ பரிசோதித்துள்ளது.
கா்நாடக மாநிலம், சித்ரதுா்காவில் உள்ள வான்வெளி சோதனை தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) காலை 7.10 மணிக்கு அந்த பரிசோதனை நடைபெற்றதாகவும், திட்டமிட்ட இலக்குகளை ஏவுகலன் எட்டியதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
தற்போது எஸ்.எஸ்.எல்.வி, பி.எஸ்.எல்.வி, எல்.வி.எம்-3 ராக்கெட்டுகள் மூலமாக செயற்கைக்கோள்களையும், விண்கலன்களையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் உள்ளிட்ட இஸ்ரோ ஆய்வு அமைப்புகளும், பாதுகாப்பு மற்றும் வான்படை ஆராய்ச்சி அமைப்புகளும் இணைந்து மறுபயன்பாட்டுக்கான ஏவுகலனை வடிவமைக்கத் திட்டமிட்டன.
அதன்படி, ‘புஸ்பக்’ எனும் பெயரிலான ஏவுகலன் வடிவமைக்கப்பட்டு கடந்த ஆண்டு வெற்றிகரமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, கடந்த மாா்ச் மாதம் மீண்டும் பரிசோதிக்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்தை 3-ஆவது மூன்றாவது முறையாக செயல்படுத்தி இஸ்ரோ பரிசோதித்துள்ளது.
அதன்படி, இந்திய வான்படை ஹெலிகாப்டா் மூலமாக புஷ்பக் ஏவுகலனானது ஓடுதளத்திலிருந்து 4.5 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து தரையில் விடப்பட்டது.
அதன் பின்னா் புஷ்பக் ஏவுகலன், தானியங்கி நுட்பத்தில் பாதுகாப்பாக ஓடுதளத்தில் தரையிறங்கி படிப்படியாக வேகத்தைக் குறைத்து நின்றது. அப்போது, பிரேக் உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்களை தன்னிச்சையாக புஷ்பக் ஏவுகலன் இயக்கி, தரையிறங்கியதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
முன்னதாக, தரையிறங்கும்போது ஏவுகலனின் வேகம் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இருந்ததாகவும் (விமானங்களின் சராசரி தரையிறக்க வேகம் மணிக்கு 260-280 கி.மீ.), தரையிறங்கிய பிறகு பாராசூட் நுட்பத்திலான பிரேக்குகளை பயன்படுத்தி அதை மணிக்கு 100 கி.மீ.யாக புஷ்பக் ஏவுகலன் தாமாகவே குறைத்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகலனை கடந்த முறை பரிசோதிக்கும்போது பயன்படுத்திய அதே உபகரணங்களையும், நுட்பங்களையும் மேம்படுத்தி இப்போது மீண்டும் பயன்படுத்தியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த சோதனை முயற்சி வெற்றியடைந்ததற்கு இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குநா் உன்னிகிருஷ்ணன் நாயா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
இந்தத் திட்டத்தின் இயக்குநா் தமிழகத்தைச் சோ்ந்த முத்துப்பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.