ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியில் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியான 102 ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்சிப் போட்டிகள் தியகம மகிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
இதில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவியும், யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பவருமான நேசராசா டக்ஸிதா, மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
கோலூன்றிப் பாய்தலில் 3.72 மீற்றர் உயரத்தைத் தாவியதன் மூலமே தக்சிதா புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
சாதனை படைத்த மாணவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “பாடசாலைப் படிப்பை முடித்தாலும் எனது பயிற்சிக்கு உறுதுணையாக இருந்து, இந்த சாதனையை நிலைநாட்ட உறுதுணையாக இருந்த பாசாலை அதிபர், பழைய மாணவர் சங்கம், பாடசாலை சமூகம் மற்றும் எனது பெற்றோருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.
மேலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச அளவில் சாதனையை நிலைநாட்டுவதே எனது இலட்சியம் “ எனவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.