எதிர்காலத்தில் பாடசாலைக் கல்வி நேரத்தின் போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபட இடமளிக்க போவதில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அவசரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயத்தை பலாங்கொட ஸ்ரீ தர்மானந்த வித்யாயதன பிரிவெனாவுக்கு நேற்றைய தினம் (27) ரணில் விஜயம் மேற்கொண்டு உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்நாட்களில் ஆசிரியர் சங்கங்களின் நடவடிக்கைகளால் ஆசிரியர் பணியின் மரியாதை கேள்விக்குறியாகியுள்ளது.
கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலுக்கு மத்தியில் பாதுகாப்பு தரப்பினரின் தடைகளை தகர்த்துச் செல்லும் ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க முடியாது.
எனவே, எதிர்காலத்தில், பாடசாலைக் கல்வி நேரத்தின் போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட இடமளிக்கபோவதில்லை அத்தோடு விசேட சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.