“எழில் கொஞ்சும் மலையக மண்ணில் மாண்மிகு கலை வடிவங்கள் பல” எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று காட்சியளிக்கும் அழகிய பூமி அது. எப்போதும் குளிர்மையாகவும்,பறவைகளின் ஓசையால் அனைவரையும் கவர்ந்திழுக்க கூடியதும் வண்ண நிற பூக்களால் நிறைந்த ஒரு நந்தவனம் என்று கூறலாம். அதுமாத்திரமின்றி சுற்றுலாத்துறைக்கு பேர் போன இடமும் அது. அத்தனை அழகு நிறைந்த இரு நிலங்களையும் உள்ளடக்கியது எம் மலையக பூமி.
அத்தனை அழகு கொண்ட எம் பூமியில் மேலும் அழகை சேர்க்கும் வண்ணம் பல திறமைகளை கொண்ட மாணவ செல்வங்கள் ஏராளமாக காணப்படுகின்றார்கள். இன்றும் கூட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.ஒவ்வொரு மாணவர்களிடமும் தனி திறமைகள் உண்டு. அத் திறமைகளை பேணுகின்ற அதே நேரம் கல்விலும் நாம் எம்முடைய திறமைகளை வெளி உலகிற்கு காட்டினால் எம் சமூகம் மேலும் விருத்தி பெறும். சில அறியாமையும், முறையான வழிகாட்டல்களும் இல்லாமையால் இன்றைய 21ஆம் நூற்றாண்டிலும் ஒரு தொழிலைப் பெற்றுக்கொள்ள போராட வேண்டியுள்ளது.
தென்னிந்தியாவிலிருந்து 200 ஆண்டுகளுக்கு முன் பெருந்தோட்ட தோட்டதொழிலாளர்களாக எம்மை ஈழம் நோக்கி அழைத்து வந்தார்கள். அன்று முதல் இன்று வரை பல்வேறு வகையான இன்னல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் நிதமும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். சிலரின் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை, சில பிரதேசங்களில் கல்வியில் பின் தங்கிய நிலை, பல பிரதேசங்களில் சம்பள உயர்வு கோரி ஆங்காங்கே போராட்டமும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் இறைவனின் அருளினால் சிலப்பிரதேசங்கள் சில விருத்தியை பெற்று பலரின் கல்வி வாழ்க்கை தற்போது உயர்ந்தும், பல்லாயிரம் கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகம் நோக்கியும் நகர்ந்து சென்றிருப்பது ஓர் சிறிய மன ஆறுதலாக உள்ளது. இருந்தாலும் மலையக மக்கள் மத்தியில் ஏக்கங்களும், தவிப்புக்களும், உரிமைகளும், கேள்விகளும் ஏராளம் காணப்படுகின்றன.
“கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்ற பொன் மொழியானது ஆதிகாலம் தொட்டு இன்று வரை பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இங்கு கூறப்பட்ட இந்த விடயம் தற்போது நடைமுறையில் இருக்கின்றதா என்றால் அது கேள்விக்குறி தான். காரணம் இம்மண்ணிலிருந்து பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து பல்கலைக்கழகம் நோக்கி பல பிரதேசங்களை கடந்து பல்வேறு மாணவர்கள் பல்கலைகழகம் பயணித்து மூன்று, நான்கு வருடங்கள் கல்வி கற்று தற்போது வேலையில்லாமல் 2000 பட்டதாரிகளுக்கு மேல் சமூகத்தில் காணப்படுகின்றார்கள். இவ்வாறு வேலையற்ற பட்டதாரிகள் உருவாகுவதற்கான காரணம் என்ன?
அவர்களின் இத்தனை நாள் உழைப்புக்கு யார் பொறுப்பு? கற்றும் அவர்கள் வீதியில் இறங்கிப்போராட வேண்டுமா? இன்னும் எத்தனை உரிமைகளை கோரி போராட வேண்டும்.
எம் சமூகத்தினரிடம் கலைத்துறையை தெரிவு செய்தால் பல்கலைக்கழகம் கட்டாயம் செல்லலாம் என்ற ஒரு எண்ணம் காணப்படுகின்றது. விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் ஏனைய துறைகளை தெரிவு செய்து சிலர் விஞ்ஞானத்துறை, வணிகத்துறை, விவசாயத்துறை என செல்கின்றார்கள். ஆனால் இவற்றினை விட பன்மடங்கு அதிகமாக கலைத்துறையில் பல்கலைக்கழகம் செல்வதும், குறிப்பிட்ட சில பாடங்களை மாத்திரம் தெரிவு செய்து கற்பதுமே இவ்வாறான ஒரு பிரச்சினை ஏற்பட காரணம் என்று கூறலாம். இவ்வாறு கற்ற சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினை விதியின் சாபமா? அல்லது எமது அறியாமையா?, இப்பிரச்சனைக்கு தீர்வு யார் காண்பது? அது யாருடைய பொறுப்பு? இத்தனை கேள்விகளுக்கும் பதில் தேடினாலே எம்முடைய அறியாமை நீங்கி மலையகம் தழைத்தோங்க வழி ஏற்படும்.
நாம் ஒரு பிரச்சினை என்றதுமே அரசியல் புரிபவர்களிடம் கேள்விகளை கேட்கின்றோம் ஆனால்அது தவறு. அவர்களிடம் கேள்வி கேட்கக்கூடாது, இன்று இருக்கும் அரசியல் நாளை மாறலாம். இங்கு கேள்வி கேட்க வேண்டியது எம்மை நாமே தவிர வேறொருவரை கிடையாது. காரணம் நம் சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு பிரஜையினுடைய அறியாமை , சிந்திக்காத தன்மையே இத்தனைக்கும் காரணம். முதலில் எம் மனதில் உள்ள சிந்தனை மாற வேண்டும் எம்மாளும் பலவற்றை சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உருவாக வேண்டும். பலரை வியப்பாக பார்க்கும் நமக்கு நாம் ஏன் அவ்வாறு மாற வேண்டும் என்ற எண்ணம் உருவாவது இல்லை?
எம் உள்ளத்தில் பல கேள்விகள் எழலாம். உயர் தரத்தில் ஏனையத்துறைகளை தெரிவு செய்து கற்க மலையகத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பெளதீக வளம், ஆசிரியர் வளம் இருக்கின்றதா? உண்மையில் போதுமான வளங்கள் இல்லை. இதுவும் நாம் அறிந்த ஒன்றே! இலங்கையிலுள்ள அனைத்து பிரஜைகளுமே கல்வி கற்பதற்கு உரிமையுடையவர்கள். எம்முடைய தேவை எது என்பதில் நாம் உறுதியாய் நின்று நோக்கத்தை அடைய போராடினால் வளங்களை எவ் வழிகளிலும் பெறலாம். இலங்கையில் பல பகுகளில் மலையக மாணவர்களின் கல்விக்காக மனித நேயம் கொண்ட பல உள்ளங்கள் உதவிப்புரிந்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆனால் அந்த தகவலை ஏனையோருக்கு பலர் கூறுவது இல்லை.
எம் சமூகம் உயர பலர் எண்ணுகின்றார்கள். இருப்பினும் உதவிப்பெறும் வழிகளைக் பலர் பகிர்ந்துக்கொள்ள தயங்குகின்றார்கள் காரணம் என்ன என்று தான் புரியவில்லை. மலையக சமூகத்தில் இருக்கும் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அனைவரிடத்திலும் மாற்றம் என்கின்ற ஒன்று ஏற்பட்டால் மாத்திரம் தான் எம் மலையகத்தில் கல்விக்கான மாற்றமானது ஏற்படும். முதலில் நாம் சிந்தனையை மாற்ற வேண்டும் சிந்திக்க வேண்டும் ஒவ்வொரு விடயத்தையும் சிந்தித்து செயற்படுகின்ற பொழுது நாம் மேற்கொள்கின்ற ஒவ்வொரு செயற்பாடும் வெற்றியை நோக்கி நகரும்
சற்று சிந்தியுங்கள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு தற்போது ஆசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், எதிர்கால ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கையில் உள்ளது. எதிர்காலம் தொழிநூட்பத்தால் இயங்க போகின்றது. ஆகவே அதற்கேற்ற கல்வியையும், விளக்கங்களை வழங்க வேண்டியது ஆசிரியர்களின் பொறுப்பாகும். பல்லாயிரம் கணக்கான சிறுவர்கள் பாடசாலை செல்கின்றார்கள் யாரை நம்பி செல்கின்றார்கள்? ஆசிரியர்களை நம்பி செல்கின்றார்கள்.
பாடப் புத்தகத்தில் இருக்கும் விடயத்தை மாத்திரம் கற்பிக்காது மாணவர்களுடைய எதிர்காலம் பற்றியும், எதிர்காலத்தில் எவ்வாறான ஒரு தொழில் வாய்ப்பை தேடிக்கொள்வது, க.பொ.தசாதாரண தரத்தில் எவ்வாறான பாடத் தெரிவினை ஒவ்வொரு தொகுதியிலும் (1- 3) மேற்க்கொள்ள வேண்டும் என்ற விளக்கம் கொடுக்க வேண்டும்.
மேலும் உயர் தரத்தின் போது எத்துறையை தெரிவு செய்து எவ்வாறான பாடங்களை கற்பது மற்றும் பல்கலைக்கழகம் தெறிவான பின்பு பல்கலைக்கழகத்தில் எவ்வாறான பாட நெறிகளை கற்றால் எவ்வாறான தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது தொடர்பான விளக்கத்தினை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டியது ஒவ்வொரு ஆசிரியரினதும் பொறுப்பாகும். ஏன் நான் இங்கு ஆசிரியர்களை கூறுகின்றேன் என்றால் பிள்ளைகள் வீட்டில் இருக்கும் நேரத்தினை விட அதிகமான நேரத்தினை பாடசாலையில் தான் கழிக்கின்றார்கள் ஆகவே அவர்களுடைய சிந்தனையை மாற்றக்கூடிய சக்தி ஆசிரியர்களிடம் மாத்திரமே உண்டு.
அதுப் போலவே ஏராளமான இளயுவதிகள் சமூகத்தில் காணப்படுகின்றார்கள். அவர்கள் தொழில் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். அதுத் தொடர்பான பல்வேறு வகையான விடயங்களை மாணவர்களுக்கு சமூக ஊடகங்கள் வாழியாக தெரியப்படுத்தலாம்.மேலும் whatsapp, facebook வழியாக தகவல்களை பகிரலாம். ஏன் ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கை கூட நாடாத்தலாம். இவ்வாறு ஒவ்வொரு செயற்பாடுகளையும் மேற்கொள்கின்ற போது கல்வி கற்கும் சமூகத்தில் பல்வேறு வகையான மாற்றங்களானது ஏற்படும்.ஆகவே தற்போது கல்வி கற்றுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மாணவர்களினுடைய சிந்தனையிலும் நாம் எவ்வாறான ஒரு தொழிலை நோக்கி பயணிக்க போகின்றோம். எவ்வாறான கற்கை நெறியினை தெரிவு செய்தால் எமக்கான தொழில் வாய்ப்பு கிடைக்கும் என்ற சிந்தனையை ஒவ்வொரு நாளும் அவர்களுடைய சிந்தனைக்கு கொண்டு வர வேண்டும் இதற்காகநாம் ஒவ்வொரு நாளும் கற்றல் செயற்பாட்டின் போது பாடப் பிரவேசத்திற்கு முன்பு ஒரு இரண்டு நிமிடம் ஒதுக்கினாலே எம் சமூகத்தில் உள்ள பிள்ளைகளினுடைய சிந்தனையில் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
மேலும் பெற்றோர்கள் தங்களின் ஆசைகளை பிள்ளைகளிடத்தில் திணிக்காது அவர்கள் எதை கற்க விரும்புகின்றார்களே அதை கற்க அனுமதி கொடுங்கள். சிறந்த சிந்தனை மாற்றமே சிறந்த செயலைமேற்க்கொள்ள வழியை காட்டும். எதிர்கால ஆசிரியர் என்ற வகையில் இந்த முறையை பின்பற்றி எம் சமூகத்தில் ஒரு சிறந்த மாற்றத்தினை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
“ஒரு சமூகத்தை மாற்றக்கூடிய சிறந்த ஆயுதம் கல்வி” என்றால் அது மிகையாகாது ஏனைய செல்வங்கள் பல காணப்பட்டாலும் கல்வி அறிவு இருந்தால் மாத்திரமே ஒருவரால் உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும். ஒரு கற்கும் சமுதாயத்தை உருவாக்க வேண்டுமாக இருந்தால் கற்ற சமூதாயத்தைக் கொண்டு தான் ஒரு சிறந்த கற்கும் சமூகத்தினை உருவாக்க முடியும். நாளை நாளை நாளை என்றே இன்றை இழக்காதே நீ இன்றை இழக்காதே! கற்ற சமூகம் ஒன்றிணைந்து கற்கும் சமுதாயத்தை உருவாக்கும் பணியில் இன்றே ஈடுப்படுவோம்.“கண்ணுடையர் என்பவர் கற்றறோர் முகத்து இரண்டு புண்ணுடையர் கல்லோதவர்.”என்ற வள்ளுவன் வாக்கை அடி நாதமாக கொண்டு கல்லாதவர் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்குவோம்.
சரவணகுமார் ரஞ்சனி
4ம் வருட கல்வியியல் சிறப்பு கற்கை மாணவி
கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை,
கிழக்கு பல்கலைக்கழகம்,
இலங்கை.