கஜேந்திரகுமார் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவில்லையென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல்துறை அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நேற்று (07) காலை கைதான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் மாலை பிணையில் விடுவித்தது.
இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், “கடந்த 2 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான காணொளிகளை பார்த்தேன். அதில் காவல்துறையினர் தமது கடமைகளை சரிவர செய்துள்ளனர்.
ஆனால் கஜேந்திரகுமார் குறித்த காவல்துறையினரை அச்சுறுத்தும் வகையிலும் அவர்களை தகாத வார்த்தைகளைக் கொண்டு திட்டியும் உள்ளார். இதனை வைத்துப் பார்க்கும் பொழுது கஜேந்திரகுமார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நடந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகின்றது” எனக் கூறினார்.
இதன்போது குறுக்கிட்ட கஜேந்திரகுமார் அவர்கள், “அந்த சந்தர்பத்தில் குறித்த இடத்திற்கு சிவில் உடையில் வந்த இருவர் தம்மை காவல்துறையினர் என கூறினர். அவர்களிடம் நான் அவர்களின் அடையாள அட்டையை காண்பிக்கும்படிக் கேட்ட பொமுது அதற்கு மறுப்பு தெரித்து என்னை தாக்கினர்” என குறிப்பிட்டார்.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இரண்டு கேள்விகளை முன்வைத்தார் .
01.சிவில் உடையில் வந்து தம்மை காவல்துறையினர் என கூறிய இருவரும் ஏன் தமது அடையாள அட்டைகளை காண்பிக்க மறுத்தனர் ?
02.கஜேந்திரகுமார் தான் இன்று நாடாளுமன்றத்திற்கு செல்லவேண்டும் என கூறிய போது அவ்வளவு அவசரமாக அவரை கைது செய்வதற்கு காரணம் என்ன ?
என அமைச்சர் டிரான் அலசிடம் கேட்டார்.
இதற்கு காவல்துறையினர் தமது கடமைகளை சரிவர செய்துள்ளனர். காவல்துறையினர் மீது எந்த தவறும் இல்லை என அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டார்.
இதன்போது கஜேந்திரகுமார் அவர்கள், “அப்போது பாதுகாப்பு அமைச்சரான ( டிரான் அலஸ்) உங்களின் உத்தரவின் பேரிலா என்னை கைது செய்தனர் என கேள்வி எழுப்பினார்.
இதன்போது குறுக்கிட்ட சாபாநாயகர் இந்த சம்பவம் குறித்த காவல்துறை விசாரணைகள் இடம்பெற்று வருவதால் இது குறித்து விவாதிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதோடு இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.