நியமனத்தை பெற்ற பின்னர் பணிப்புறக்கணிப்பில் இணைந்து பிள்ளைகளின் எதிர்காலத்தை இருளாக்காதீர்கள் என நேற்றையதினம் (03) ஆசிரியர் பணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அறிவுரை வழங்கியுள்ளார்.
கொழும்பு அலரி மாளிகையில் நேற்று (03) காலை அதிபர் ரணில் இவர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்தார்.இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
இந்த ஆசிரியர் நியமனங்களை வழங்குவது இலகுவான காரியமல்ல. பொருளாதார நெருக்கடி நிலையிலும் இந்த ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான சவாலை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.
இன்று தேசிய பாடசாலைகளுக்கு சுமார் 2000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாட்டை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விடுவித்து, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இவ்வாறான நியமனங்களை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரப் பணி தற்போது வெற்றியடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாடு வங்குரோத்து நிலையில் இருந்த வேளையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நிதி அமைச்சராக நிதி ஒதுக்கீடுகளைச் செய்து உங்களுக்கு நியமனங்களை வழங்க முடிந்தது. ஆனால் இந்த நியமனத்தை பெற்றுக்கொண்டு தொழிற் சங்க நடவடிக்கைகளில் இணைந்து பிள்ளைகளின் எதிர்காலத்தை இருளாக்காதீர்கள்.
நீங்கள் பட்டதாரியாக கல்விப் பயணம் மேற்கொண்டது. உங்களின் ஆசிரியர்கள் உங்களுக்கு வழங்கிய கல்வியினால் தான். ஆனால், நீங்கள் பிள்ளைகளுக்கு கல்வியை கற்றுக் கொடுக்காமல் தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டால், நமது பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டுவிடும்.
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஒருவர், யாரிடமும் கையேந்தாமல் வேலை வாய்ப்புகளைப் பெற திறமை இருக்க வேண்டும். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் கல்வி மறுசீரமைப்பின் மூலம் தொழில் வாய்ப்புக்கு ஏற்ற பட்டதாரிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மனித வளங்களை முறையாக நிர்வகிப்பதன் மூலம் ஒரு நாட்டை பொருளாதார ரீதியாக பலப்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.