மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் தொழில்வாய்ப்புகளுக்காக எதிர்வரும் காலங்களில் குரல்கொடுப்பேன் என எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் நேற்று (04) மட்டக்களப்பில் தொழில்வாய்ப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாகவுள்ள படுகொலைசெய்யப்பட்ட நினைவுதூபிக்கு அருகில் இந்த தொடர்ச்சியான போராட்டத்தினை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுத்துவருகின்றனர்.
நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்த எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் டி.தயானந்தன் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் போராட்ட இடத்திற்கு வந்த சஜித் பிரேமதாச பட்டதாரிகளுடன் கலந்துரையாடினார்.
இதன்போது ஏனைய மாவட்டங்களில் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு தொடக்கம் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுவருவதாக இங்கு சுட்டிக்காட்டினார்கள்.
இரண்டாயிரத்திற்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளதாகவும் அவர்களுக்கான நியமனங்களை அரசாங்கம் வழங்க நடவடிக்கையெடுப்பதற்கான அழுத்தங்களை எதிர்க்கட்சி வழங்கவேண்டும் எனவும் இதன்போது மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் குரல்கொடுப்பதாகவும் வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமைக்காக தொடர்ச்சியாக ஆதரவு வழங்குவதாகவும் இதன்போது எதிர்க்கட்சி தலைவர் உறுதியளித்தார்.