கருணா அம்மான் என்னும் பெயரை எனக்கு தந்தவர் தலைவர் பிரபாகரனாகும்.அதனை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் போராளிகளுக்கு உதவி திட்டங்கள் முன்னெடுக்கும் நிகழ்வு இன்றைய தினம் (07) மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உபதலைவர் ஜெயா சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது முன்னாள் போராளிகள் 100பேருக்கு தமது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் 10இலட்சம் ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது. முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் செந்தூரன் உட்பட கட்சி ஆதரவாளர்கள்,அமைப்பாளர்கள்,முன்னாள் போராளிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,
தலைவருக்கும் கருணா அம்மானுக்கும் இடையில் நடைபெற்றது ஒரு சிறிய பிரச்சினை.பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஏற்பட்ட பிரச்சினை. அதனை வைத்து சிலர் பூதாகரமாக்கி வருகின்றனர். தலைவரின் இழப்பு என்பதை இன்று நாங்கள் நினைத்துப் பார்க்கும் போதும் அது ஒரு வேதனையான விடயமாக இருக்கின்றது. அவரின் உடலை நான் சென்றே அடையாளப்படுத்தினேன். அது பாரிய வேதனையான விடயமாகும்.
இன்று எத்தனையோ பேர் முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டு தலைவரின் பெயரை விற்று வெளிநாடுகளில் நிதிகளையும் வசூலித்துக்கொண்டு வாழ்ந்துவருகின்றார்கள்.
நான் தலைவருடன் 22 வருடங்கள் பயணித்தவன். இன்றும் எனது அடிமனதில் அவரது எண்ணங்களும் நினைவுகளும் வாழ்ந்துகொண்டிருக்கின்றது. இன்று கருணா அம்மான் என்ற பெயர் வருவதற்கு காரணமே தலைவர் பிரபாகரன் தான். அதனை நான் மறக்கமாட்டேன். அதனை மனதில்கொண்டு எமது போராளிகளை சிறந்த முறையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
இன்று எங்கள் மத்தியில் பல அமைச்சர்கள் இருந்தாலும் எதுவித பிரயோசனமும் அற்ற நிலையில்தான் நாங்கள் வாழ்கின்றோம். ஏனென்றால் ஊழல். வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் ஒப்பந்தக்காரர்கள் இருபது வீதம் கொடுக்க வேண்டும். வேண்டுமென்றால் மட்டக்களப்பிலுள்ள ஒப்பந்தக்காரர்கள் அனைவரையும் கேட்டுப்பாருங்கள் எவ்வளவு கொடுக்கின்றீர்கள் என்று. அது தான் வீதி அபிவிருத்தி. இதேபோன்று பல பிரச்சினைகள் நிறைய இடங்களில் நடக்கின்றன.
ஆகவே எதிர்காலத்தை சிறந்த முறையில் திட்டமிட்டு இன்று நாங்கள் சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்தியிருக்கின்றோம். அம்மான் படையணி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் எங்கள் போராளிகளை கௌரவிப்பதற்காகவாகும். இதுபற்றி பல சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஏன் படையை திரட்டுகின்றீர்கள், யுத்தம் செய்யப்போகின்றீர்களா என என்னிடம் பல ஊடகவியலாளர்கள் கேட்டார்கள்.
எங்களுடைய போராளிகள் சிதறிக் கிடக்கின்றனர், அவர்கள் வாழ்வாதாரமற்ற நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவர்களை ஒரு பலமான நிலையில் ஒருங்கிணைத்தால் மாத்திரமே உலகத்தின் கவனம் திரும்பும். எங்கள் மீது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும், போராளிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு ஆர்வம் ஏற்படும். அதற்காகவே இந்தக் கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம்.
சில சில இடங்களில் சிறு சிறு அமைப்புகளாக உருவாகி எதுவித பிரயோசனமும் இல்லாமல் இருக்கின்றது. அதை மாற்றியமைத்து சிறந்த முறையில் கட்டியெழுப்பி எதிர்காலத்தை பலப்படுத்த வேண்டும், அதேபோன்று எங்கள் திறமை மிக்க போராளிகள் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். பிரதேச சபை, மாகாண சபைகளில் பங்குபற்ற வேண்டும். அந்த அடிப்படையில் சென்றால் மாத்திரம் தான் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
இன்று முக்கியமான ஒரு தினம் தமிழ்பெரும் தலைவரின் உடல் இன்று திருகோணமலையில் தகனம் செய்யப்படுகின்றது. அவரை மறக்கமுடியாது.நான் தலைவருடன் இந்தியாவிலிருந்தபோது அடிக்கடி சம்பந்த ஐயாவினையும், மாவை ஐயாவினையும் சந்தித்து பேசுவோம்.தள்ளாடும் வயதிலும் தமிழர்களின் உரிமைக்காக குரல்கொடுத்து வந்தவர், ஒரு மாமனிதர்.அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை எமது கட்சிசார்பாக தெரிவித்துக்கொள்கின்றேன்.அவரின் இழப்பு என்பது பெரும் இழப்பாகவே பார்க்கின்றேன்.
தமிழர்களின் உரிமையினை பாதுகாப்பதற்கு உருவாக்கப்பட்டதே எமது கட்சியாகும். இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பதவிக்காக போட்டி நடைபெறுகின்றது.பதவிக்காக சுமந்திரனும் சிறிதரனும் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.அந்த கட்சியானது இதுவரை காலமும் சம்பந்தர் என்ற ஒரு தூணில்தான் நின்றது.இன்று அந்த தூணும் சாய்ந்துவிட்டது.இன்று அவர்கள் சிதறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.அதனால்தான் நாங்கள் அனைத்து கட்சிகளையும் அழைக்கின்றோம்.