எங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் முன் அவற்றை தீர விசாரித்து ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தை இராஜாங்க அமைச்சர் இன்று (08) நேரில் சென்று ஆராய்ந்தார்.
இதன் போது, விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணாஅம்மான்), மட்டக்களப்பு இராஜாங்க அமைச்சர்கள் ஊழலில் ஈடுபடுவதாக முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பான ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே வியாழேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“நான் தொடர்ச்சியாக 10 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக உள்ளேன். நாங்கள் உளத்தூய்மையோடு தான் எங்கள் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கிறோம்.
எனவே, இவ்வாறான அநாகரிகமான செயற்பாடுகளில் நாம் ஒருபோதும் ஈடுபட மாட்டோம். குறித்த குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் நிரூபியுங்கள்.
அதேவேளை, சில சில தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளின் பின்னால் நிற்கும் சூழ்நிலையும் காணப்படுகின்றது.
தொழிற்சங்கங்களின் கோரிக்கை நியாயமாக இருந்தாலும் நாட்டின் வளர்ச்சியடைந்துவரும் பொருளாதாதரத்தினை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுசெல்லாத வகையில் நிலைமைகள் இருக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.