கோஸ்டாரிகா நாட்டில் முதலை ஒன்று ஆண் துணையே இல்லாமல் கர்ப்பமடைந்துள்ளது.
அதன் கரு மரபணு ரீதியாக 99.9% தாய் முதலையை ஒத்து இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
16 ஆண்டுகளாக தனிமையில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை தானே இனப்பெருக்கம் செய்யும் இந்த செயல்முறை கன்னி பிறப்பு என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் விஞ்ஞானிகள் உட்படப் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து ஆய்வாளர் ஒருவர் கூறுகையில்,
“சுறாக்கள், பறவைகள், பாம்புகள் மற்றும் பல்லிகள் ஆகியவற்றில் இதுபோல ஆண் துணை இல்லாமல் கருத்தரிப்பது என்பது பரவலாக நடக்கும்.
மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளாகப் பாம்புகளை வளர்க்கத் தொடங்கிய போது, இது குறித்த செய்திகள் அதிகம் பரவின.
இருப்பினும், முதலைகளில் இதுபோல நடப்பதை நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
இதனை ஆய்வாளர்கள் “கன்னிப் பிறப்பு” அதாவது “virgin birth” என்று குறிப்பிடுகிறார்கள். parthenogenesis என்று அழைக்கப்படும் இந்த முறை பறவைகள் மத்தியில் அதிகம் காணப்படும்.
இருப்பினும், முதலைகளில் இது போல நடப்பது இதுவே முதல்முறையாகும்.
கோஸ்டாரிகா நாட்டில் வனவிலங்கு பூங்காவில் இருந்த 18 வயதான அமெரிக்கப் பெண் முதலை தான் இப்படி தானாகவே கருத்தரித்துள்ளது.
இதுபோன்ற கன்னிப் பிறப்பு எப்படி நடக்கிறது என்பதையும் ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.