கடந்த சில நாட்களாக இணைய மிரட்டல் காரணமாக உயிரிழப்பவர்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் ஊடாக ஒருவரை மனதளவில் பாதிப்புக்குளாக்கி அவர்களை தவறான முடிவெடுக்க தூண்டுவதாக சமூக ஊடகங்களின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
இதனடிப்படையில், அண்மையில் கேரளாவை சேர்ந்த பெண்ணொருவரும் மற்றும் தற்போது மலேசியாவை சேர்ந்த பெண்ணொருவரும் இணைய மிரட்டல் காரணமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், கேரளாவை சேர்ந்த 18 வயதுடைய ஆதித்யா நாயர் என்ற பெண் இன்ஸ்டாகிராமில் பிரபலாமாக இருந்து வந்த நிலையில் அங்கு ஒருவருடன் குறித்த பெண்ணுக்கு நட்பு ஆரம்பமாகியுள்ளது.
இதையடுத்து, குறித்த பெண்ணும் மற்றும் அந்த இளைஞரும் ஒன்றாக இணைந்து சமூக வலைத்தளங்களில் தமது காணொளிகளை பதிவிட்டு வந்துள்ளனர்.
சிறிது காலத்தில் குறித்த பெண்ணுக்கும் இளைஞருக்கும் இடையில் விரிசல் ஏற்பட அந்த இளைஞரின் நட்பு வட்டாரத்தில் உள்ள நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் குறித்த பெண்ணை இணைய மிரட்டல் ஊடாக மனவுளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளனர்.
இவ்வாறு ஜூன் பத்தாம் திகதி குறித்த பெண் தவறான முடிவெடுத்து காப்பாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஜூன் 16 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, தற்போது மலேசியாவை சேர்ந்த 29 வயதுடைய ராஜேஸ்வரி அப்பாஹு என்ற பெண்ணும் சமூக வலைத்தளங்களில் இணைய மிரட்டல் காரணமாக தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் சமூக அக்கறை சார்ந்த விடயங்களில் அதிக ஈடுபாடு செலுத்தி வந்த நிலையில் இதற்கு புறம்பான சிலர் டிக்டாக்கில் போலி கணக்குகள் ஊடாக அவரை தாக்கியுள்ளனர்.
மேற்படி, பெண்ணின் புகைப்படங்களை போலி கணக்குகளில் தவறான முறையில் சித்தரித்து வெளியிட்டு வந்த நிலையில் அந்த பெண் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
இந்த நிலையில், இவ்வாறு சமூக ஊடகங்கள் ஊடாக போலி கணக்குகளினால் இணைய மிரட்டல் மற்றும் தகாத நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு சமூகவலைதள பாவனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.