கடந்த 8ஆம் திகதி மற்றும் 9ஆம் திகதிகளில் கடமைகளில் ஈடுபட்டிருந்த அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இன்று (11) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவொன்று இவ்வாறு முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.
ஒன்றிணைந்த பணிப்புறக்கணிப்பில் கலந்து கொள்ளாத பணியாளர்களுக்கு விசேட சம்பள அதிகரிப்பை வழங்கி அரச உத்தியோகத்தர்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரச சேவையின் நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள 25,000 ரூபா கொடுப்பனவை தமக்கு வழங்குமாறு கோரி அரச ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 8ஆம் திகதி மற்றும் 9ஆம் திகதிகளில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத அரச ஊழியர்களுக்கு விசேட சம்பள அதிகரிப்பை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரச சேவையின் அனைத்து தொழிற்சங்கங்களுடன் இணைந்து விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.