இந்தியாவின் நல்கொண்டா மாவட்டம், குக்கடம் கிராமத்தில் இரண்டு இளைஞர்களின் ஒருதலை காதல் தொல்லையால் கல்யாணி (19) என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதால் இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இளம்பெண்ணின் மரணத்திற்கு அதே ஊரைச் சேர்ந்த அரூரி சிவா மற்றும் கொம்மனபொயின மது ஆகிய இரு இளைஞர்கள் காரணமாக உள்ளனர். இருவரும் தொடர்ந்து இளம்பெண்ணை பின்தொடர்ந்து துன்புறுத்தி உள்ளனர். மேலும் இருவரில் ஒருவரின் காதலை ஏற்க வேண்டும். இல்லையென்றால் சமூக வலைதளங்களில் உனது படங்களை மார்பிங் செய்து பதிவிட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதனால் விரக்தியடைந்த அந்த இளம்பெண் பெற்றோர் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து தனது பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நான் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு விட்டேன் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடந்த போது அவரது சகோதரரும் கல்லூரிக்கு சென்றிருந்தார்.
இதனால் சிறுமியின் பெற்றோர், அக்கம்பக்கத்தினரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் சிறுமியை மிரியாலகுடா மருத்துவமனைக்கும், பின்னர் நல்கொண்டாவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். ஆனால் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து, சிறுமியின் சடலத்துடன் அத்தங்கி – நர்கெட்பள்ளி வீதியில் சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது பொலிஸார் கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.