கடைசியாக சந்திரனில் மனிதன் கால் பதித்த நேரத்துடன் ஒப்பிடும் போது, தற்போதைய நிலவின் நேரம் சுமார் 1.1 வினாடிகள் அதிகரித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவின் தென் துருவத்தில் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ள நிலையில் அங்கு பல ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றது.
மேலும், சந்திரனின் தென் துருவம் என்பது சூரியனில் இருந்து விலகி நிரந்தரமாக நிழலாக இருக்கும் ஒரு பகுதியாகும், அங்கு மனிதர்கள் தரையிறங்கக்கூடிய இடங்களை நாசா கண்டறிந்துள்ளது.
நாசா கடந்த 1969-ம் ஆண்டு, அப்போலோ திட்டத்தின் மூலம், நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பி வரலாற்று சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து, தற்போது மீண்டும் நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தத் திட்டத்திற்கு ஆர்டெமிஸ் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்தின்படி நாசா நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை நடத்த உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி அறிக்கை ஒன்றில், நிலவின் நேரம் பூமியை விட வேகமாக ஓடத் தொடங்கியுள்ளது. நிலவின் நேரம் ஒரு நாளைக்கு 57 மைக்ரோ விநாடிகள் வேகமாக ஓட தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளது.
ஆர்டெமிஸ் பயணத்திற்கு முன் சந்திரனின் நேரத்தை துல்லியமாகக் கணிக்க நாசா முடிவெடுத்துள்ளது. 52 ஆண்டுகளுக்கு முன் விண்வெளி வீரர்கள் கடைசியாக சந்திரனில் கால் பதித்தனர்.
அப்போதிருந்த நேரத்துடன் ஒப்பிடும்போது நிலவின் நேரம் சுமார் 1.1 வினாடிகள் அதிகரித்துள்ளது. சாதாரணமாக பார்க்கும்போது இது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது என்று தோன்றினாலும் பூமி மற்றும் சந்திரனின் நேரம் சரியாக இருந்தால் தான் கூகுள் வரைபடம் போன்ற அமைப்புகளை செயற்கைக்கோள்கள் துல்லியமாக கணித்து தகவல்களை வழங்கும் என்பதே இதன் பிரதானமான பிரச்சனையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.