சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோருவதாக காணாமல் போன தமிழ் உறவுகளின் தாய்மார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களது தொடர்ச்சியான போராட்டத்தின் 2300 ஆவது நாளான ஜூன் 8 ஆம் அன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக மெட்ராஸ் ட்ரிபியுன் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன தமது பிள்ளைகளை கண்டறியவும், தமிழர்கள் இறையாண்மையை அடைய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைக் கோரியும் தாய்மாரின் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவின் கீழ் இலங்கைக்கு வழங்கிய நிதியானது தமிழர்களுக்கு எதிரான இடைவிடாத ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறைக்கு உதவியுள்ளதாக காணாமல் போனோரின் தாய்மார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வழங்கப்பட்டதை அடுத்து தமிழர் மீதான ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காணாமல் போன தமிழ் உறவுகளின் தாய்மார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை அரசாங்கம், உணவு, மருந்து, சமையல் எரிவாயு, பெட்ரோலியம் என பல அடிப்படைத் தேவைகளுக்காக கெஞ்சிக் கொண்டிருந்தது.
இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியால் மீண்டும் நிலைமை சீர்பட்டுள்ளது. எனவே இலங்கை அரசாங்கம், தமிழர்களின் நிலத்தில் இனப்படுகொலைக் கொள்கைகளையும் நடைமுறைகளையும் துரிதப்படுத்துகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பின் பின்னர், இலங்கை இராணுவமும் பௌத்த பிக்குகளும் தமிழர்களிடமிருந்து பலவந்தமாகவும் சட்டவிரோதமாகவும் காணிகளைப் பறித்து, பௌத்த சிங்களவர்கள் வாழாத தமிழர் தாயகம் முழுவதும் மகா சங்க சிங்கள பௌத்த சின்னங்களை நிறுவுகின்றனர்.
கடந்தகால அநீதிகள் மற்றும் படுகொலைகளை, குறிப்பாக 146,000 தமிழர்களைக் கொன்று 90,000 கணவர்மாரை இழந்த பெண்களையும் 50,000 தமிழ் அனாதைகளையும் உருவாக்கிய 2009 இனப் போரின் இறுதி நாட்களை இது மேலும் நினைவூட்டுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி மூலம் தமிழர் தாயகத்தில் இலங்கை இராணுவத்தின் பிரசன்னம் மேலும் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
எமது சமூகங்களை பலவீனப்படுத்தவும், குழி பறிக்கவும் இந்த இராணுவங்கள் தமிழ் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை ஊக்குவிப்பதுடன் எதிர்கால தமிழ் சந்ததியை அழிக்கும் நோக்கில் தமிழர்கள் மத்தியில் பாலியல் ஆர்வத்தை வலுப்படுத்தும் வகையில் செயற்படுகின்றன.
2009 ஆம் ஆண்டு, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளிண்டன் தனது பதவிக்காலத்தில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை எதிர்த்தார்.
தமிழர் தாயகத்தில் இருந்து இலங்கை இராணுவம் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக ஐக்கிய நாடுகள் அல்லது அமெரிக்க படைகள் வரும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் நிறுத்தப்பட வேண்டும்.
இனப்படுகொலை செய்த இலங்கை சிங்கள இராணுவத்தை தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இலங்கை அரசுக்கு நிதியுதவி வழங்குவது மனித உரிமை மீறலாகும்.
இலங்கையின் தமிழர் பகுதியில் பல மனித உரிமை மீறல்கள் உள்ளன.
ஊழல் நிறைந்த நீதித்துறை மற்றும் ஜனநாயகம் அல்லது மக்களின் கருத்துகளுக்கு மதிப்பில்லை.
இந்தநிலையில் தமிழர்களின் சுதந்திரத்தை அழிக்கவும், தமிழர்களின் இருப்பை அவர்களின் சொந்த மண்ணில் இருந்து துடைக்கவும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவுகிறது என்பதுதான் கடுமையான உண்மை என்று காணாமல் போன தமிழ் உறவுகளின் தாய்மார்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.