மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு அவர்களின் நன்னடத்தையின் அடிப்படையில் தண்டனை காலத்தை குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனையளிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படமாட்டாது என தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (12) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன, இலங்கையின் சிறைச்சாலை கட்டமைப்பில் 13 ஆயிரம் கைதிகள் மாத்திரம் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் தற்போது 30 ஆயிரம் கைதிகள் உள்ளார்கள்.
சிறைச்சாலைகளில் 80 வயதை அண்மித்த சிரேஷ்ட பிரஜைகள் உள்ளனர். இவர்கள் உடல் மற்றும் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென விடுத்த வேண்டுகோள் தொடர்பில் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
நீங்கள் குறிப்பிடும் இந்த பிரச்சினைக்கு கடந்த ஒன்றரை வருடகாலமாக தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகின்றோம். சிறைச்சாலைகளில் உள்ள வயது முதிர்ந்தோர், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மூன்று வைத்திய நிபுணர்களை உள்ளிடக்கிய குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரைக்கு அமைய தீர்மானம் எடுக்க எதிர்பார்க்கப்பட்டது.
இந்த குழுவுக்கு முதல் கட்டமாக 100 சிறைக்கைதிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். இருப்பினும் இந்த குழு இரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட்ட கைதியை கூட விடுதலை செய்ய பரிந்துரைகளை முன்வைக்கவில்லை. இவ்வாறான நிலையில் அண்மையில் தண்டனை சட்டக் கோவையை திருத்தம் செய்தோம்- என்றார்.