மட்டக்களப்பு பிள்ளையாரடியிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த போக்குவரத்து ரீதியான பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக பெருந்தெருக்கள் அமைச்சு சுமார் 30 கோடி ரூபா நிதியில் காபட் இடப் பட்ட உள்ளக வீதி ஒன்றை நிர்மாணித்துள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் எதிர்நோக்கி வந்த இந்த நீண்ட கால பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் புதிய காபற்று வீதி தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
குறித்த புதிய காபட் வீதியை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த் தன கடந்த 13 ஆம் திகதி மாலை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் உள்ளிட்ட வீதி அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாக இருந்தனர்.
இதன்போது பல்கலைக்கழக உபவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் புகையிரத போக்குவரத்தில் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகள் பற்றி எடுத்துக் கூறியதுடன், அப்பிரதேசத்தில் புகையிரத உப நிலையம் ஒன்றை அமைத்துத் தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அதேசமயம் பல்கலைக்கழகம் முன்பாக வீதிகளை கடக்கும் போது பல்வேறு அனர்த்தங்களையும், வீதி விபத்துகளையும் சந்திக்கும் பல்கலைக்கழக மாணவர்களின் வசதி கருதி பல்கலைக்கழகத்தின் முன்பாக மேம்பாலம் ஒன்றை அமைத்துத் தருமாறும் இங்கு அமைச்சர் பந்துல குணரத்னவிடம் உபவேந்தர் கோரிக்கை விடுத்தார்.
இக்கோரிக்கையினை கவனத்தில் கொண்ட அமைச்சர் பந்துல குணரத்ன புகையிரத உபநிலைய ம் ஒரு மாதத்தில் உருவாக்குவதற்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும், மேம் பாலம் அமைக்கும் பிரச்சினையை அடுத்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கக்கூடியவாறு தாம் நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்தார்.