மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கோரகல்லிமடு கிராமத்து மக்களின் நன்மை கருதி தற்காலிக உப தபால் அலுவலகம் ஒன்று நேற்று (15) வர்த்தக வாணிப மற்றும் கணியவளங்கள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
பிரதேச மக்கள் தங்களது அஞ்சல் சேவை வசதிகளை பெற்றுக் கொள்ளும் முகமாக அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளினை அடுத்து அமைச்சர் எடுத்த துரித முயற்சியின் பயனாக இவ் உப தபாலகம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
மக்களின் சேவையை கருத்தில் கொண்டும், தபால் திணைக்களத்தின் வருமானத்தை கருத்தில் கொண்டும் இவ் உப தபாலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இது வாரத்தில் 3 நாட்கள் தபால் சேவையை வழங்கவுள்ளது. குறித்த நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதி தபால் மா அதிபர் எம்.எச்.அஸ்லம், மட்டக்களப்பு தபால் மா அதிபர் எஸ்.ஜெகன் உட்பட பாடசாலை அதிபர், கிராமசேவகர் எனபல முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.