செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏ.ஐ சமீப காலங்களில் வரலாறு காணாத வளர்ச்சியை எட்டி வருகிறது. நாம் கற்பனையிலும் நினைத்திராத ஏராள சேவைகளை ஏஐ தொழில்நுட்பம் சில நிமிடங்களில் செய்து அசத்தி வருகிறது.
பாடல்களை எழுதுவதில் இருந்து, கோடிங் எழுதுவது, மிமிக்கிரி, வீடியோ எடிட், ஆடியோ எடிட் என ஏகப்பட்ட வேலைகளை அசாத்தியமாக செய்து முடிக்கும் வல்லமை கொண்டுள்ளது. பலரது வேலைகளை ஏஐ பறித்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக தொடர் அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
இந்த நிலையில், சாட்ட் ஜிபிடி என்ற சேவையை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம் தனது புது ஏஐ சேவைக்கு பகுத்தறிவை புகுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விவரங்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வழங்கியுள்ளது. அதில் புதிய ஏஐ சேவையை உருவாக்கும் ஓபன்ஏஐ திட்டம் பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளன.
அதன்படி ஓபன் ஏஐ நிறுவனத்தில் ஸ்டிராபெரி என்னும் பெயரில் குழு ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த குழு எதுமாதிரியான வேலைகளில் ஈடுபட்டு வந்தது என்பது பற்றி எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தது. தற்போது ப்ராஜெக்ட் ஸ்டிராபெரியின் நோக்கம் மற்றும் இதர தகவல்களை ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் ப்ராஜெக்ட் ஸ்டிராபெரி பயனர் கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு மட்டுமின்றி, தனிச்சையாக இணையத்தில் உலவி, தேவையான விவரங்களை சேகரிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதனை ஓபன் ஏஐ டீப் ரிசர்ச் என்று அழைக்கிறது.
“எங்களது ஏஐ மாடல்கள் உலகை நாம் எப்படி பார்த்து, புரிந்து கொள்கிறோமோ அதை போன்றே செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தொடர்ச்சியான ஆய்வுகள் ஏஐ துறையில் மிகவும் இயல்பான ஒன்றுதான். இந்த சிஸ்டம்கள் எதிர்காலத்தில் பகுத்தறிவு பெறும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளோம்,” என்று ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.