மில்கோ பால் சேகரிப்பு நிலையத்தை இந்திய கம்பனி ஒன்றிற்கு விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்து பால் பண்ணையாளர்கள் நேற்றைய தினம் (16) அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலில் மட்டக்களப்பு எருவில் பால் சேகரிப்பு நிலைய பால் பண்ணையாளர்கள் தமது சேகரிப்பு நிலையத்தில் நின்று , பால் கலண்களுடன் , அருகில் உள்ள கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு முன் ஒன்றுகூடி கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இதுவரை காலமும் எதுவித தடைகளும் இன்றி மில்கோ பால் சேகரிப்பு நிலையத்திற்கு பாலை வழங்கி கொண்டு வருகிறோம் அதில் எமக்கு இடர்பாடுகளும் இல்லை.
எமக்கு மில்கோ நிறுவனம் வாராந்தம் முறையாக எமக்குரிய கொடுப்பனவு முறைகளை வழங்குகிறது.மேலும் எமக்கு பிள்ளைகளின் கற்றல் , மரணச் செலவு , திருமணச்செலவு , உள்ளிட்ட பல செலவுகளுக்கும் மில்கோ நிறுவனத்தின் மேலதிக உதவிகளை நல்கி வருகின்றனர்.
எனவே இவ்வாறான நிறுவனத்தை இந்திய கம்பனிக்கு விற்பனை செய்வதை நாம் முற்றாக எதிர்கிறோம். இந்த விடயத்தை கருத்தில் கொண்டு மில்கோ நிறுவனத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்வதை நிறுத்தா விட்டால் எமது போராட்டம் மேலும் தொடரும் என பால் பண்ணையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதே போன்று மற்றுமொரு ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மண்டூர் கணேசபுர பால் சேகரிப்பு நிலையத்தில் ,பால் வழங்கி கொண்டு இருக்கும் பால் பண்ணையாளர்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.