மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் திறக்கப்பட்ட மதுபான சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் பொலிசார் திட்டமிட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட பெரும்பாலானோர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் பலரது உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன என் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இருதயபுரம் பகுதியில் சேனையூரைச் சேர்ந்த கிருஸ்ணதாஸ் என்பவருக்கு சொந்தமான கட்டடத் தொகுதியில் கடந்த 13.04.2024 அன்று வியாழக்கிழமை மதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் மதத்தலைவர்கள், மாணவர்கள், அயல் கிராமங்களில் உள்ள முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்து மதுபான சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 18.06.2024 செவ்வாய்க்கிழமையன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதில் 400க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மூதூர் பிரதேச செயலாளருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதுடன் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர். இதனையடுத்து குறித்த மதுபானசாலை அன்றையதினம் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கையிடப்பட்டது. குறித்த மதுபானசாலை அன்றையதினம் இரவு 12.00 மணியுடன் மூடப்பட்டது.
பின்னர் குறித்த மதுபானசாலை 24.06.2024 அன்று திங்கட்கிழமை காலை மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதிமக்கள் மதுபானசாலைக்கு முன்பாக தமது எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மதுபானசாலை பூட்டப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் இரவு 9.00 மணிவரை அவ்விடத்தில் இருந்து பின்னர் கலைந்து சென்றனர்.
மீண்டும் மறுநாள் காலை 25.06.2024 அன்று செவ்வாய்க்கிழமை மதுபானசாலை மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து காலை 10.00 மணியில் அவ்விடத்தில் கூடிய மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பொலிசார் சிலருக்கு அழைப்பு எடுத்து சாராயம் வாங்க வற்புறுத்தியதாகவும், இதனால் அயல் கிராமங்களில் இருந்த சில இளைஞர்கள அங்கு வந்து சாராயம் வாங்கியுள்ளார்கள். இதன்போது அங்கிருந்த பெண்கள் மதுபானம் வாங்க வருகின்றவர்களிடம் மதுபானம் வாங்க வேண்டாம் என கெஞ்சி அழதுள்ளார்கள். இதனால் சிலர் திரும்பி சென்றுள்ளனர். இதனால் இவர்களுக்கு இலகுபடுத்தைலை மேற்கொள்ளும் முகமாக முன்னுக்கு நின்றவாறே மதுபானசாலையில் வேலை செய்பவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து சிட்டையை போட்டு வைக்குமாறு தெரிவித்து விரைவாக சாராயத்தை வங்குவதற்கு தங்களால் அழைக்க்பட்ட மதுப்பிரியர்களுக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் இரவு 8.00 மணிக்குப் பின்னர். ஆங்கிருந்த பெண் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முகமாகவும், முதலுதவி மேற்கொண்டிருந்தபோது வீதிக்கு எதிரே இருந்து மதுபானசாலையை நோக்கி கல்லெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து வீதிக்கு எதிரே இருந்த பொலிசார் போராட்டத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தத்தொடங்கினார்கள். இதன்போது பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயன்ற பொதுமக்கள் அருகில் இருந்த கடைகளுக்குள் தஞ்சம் புகுந்தனர் அதற்குள்ளும் நுழைந்த பொலிசார் அங்கிருந்த மக்கள்மீது கொடூரமான தாக்குதலை மேற்கொண்டனர். இதில் பெரும்பாலானோர் அருகில் இருந்த தேவாலயத்திற்குள் தஞ்சம் புகுந்தனர். அங்கேயும் உள்நுழைந்த பெரும்பாலான பொலிசார் சரமாரியான தாக்குதலை பெண்கள் என்றும் பாராது ஆலய மதகுரு முன்னாலேயே மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன் தேவாலயத்திற்கு பின்னால் இருந்த வீடு ஒன்றில் இருந்த பாலூட்டும் தாய் உட்பட பலர்மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன் பலரது வீடுகளுக்குள்ளும் புகுந்து அங்கிருந்த தளபாடங்கள், வாகனங்களுக்கு சேதம் விளைவித்ததோடு அங்கிருந்த பெண்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார்கள். இதைவிட இரவு நேர வகுப்புகளுக்கு சென்று வந்த மாணவர்கள், வீதியால் வந்தவர்கள் அனைவரையும் தாக்கி சிலரை கைது செய்தனர்.
அத்துடன் அருகில் இருந்த கடைகள் மற்றும் வீடுகளுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களினதும் ஏனையோரினதும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு வீதியில் தூக்கி எறியப்பட்டு பின்னர் கொண்டு செல்லப்பட்டது. மேலும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும், ஏனைய பொருட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட 13 துவிச்சக்கரவண்டி, 11 மோட்டார் சைக்கிள், 3 முச்சக்கரவண்டி ஆகியன பொலிசாரினால் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
மாலை நேர வகுப்பு முடிவடைந்து அப்பகுதியால் வருகைதந்த பாடசாலை மாணவன் உட்பட 11 ஆண்களும் பாலூட்டும் தாய் உட்பட 4 பெண்களும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களை ஆண் பொலிசாரே கைது செய்திருந்ததோடு, கைது செய்த ஆண்களை கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
கைது செய்யப்பட்ட 15 பேரும் 26.06.2024 அன்று புதன்கிழமை மூதூர் நீதிமன்றில் பொலிசாரினால் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்கள். இதன்போது 03.07.2024 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து மறுநாள் 27.06.2024 அன்று குறித்த வழக்கானது பொலிசாரினால் நகர்த்தல் விண்ணப்பத்தின் மூலம் விசாரணைக்காக எடுக்கப்பட்டு அதில் இருந்த வழக்குப் பிரிவுகளை நீக்கியிருந்தார்கள்.
இந்நிலையில் மறுநாள் 28.06.2024 அன்று குறித்த வழக்கானது எதிராளிகள் சார்பாக நகர்த்தல் விண்ணப்பத்தின் மூலம் விசாரணைக்காக எடுக்கப்பட்டு அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்ததோடு பிணை விண்ணப்பமும் செய்யப்பட்டு அனைவரும் தலா 50000 ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.
குறித்த ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யவேண்டியுள்ளதாக தெரிவித்து நீதிமன்றில் அனுமதி பெற்றுள்ள அவர்கள் தொடர்பான விபரங்களை நீதிமன்றத்திற்கு வழங்காமல் இரவு பகலாக தேடி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.
பயத்தின் காரணமாக தேடப்படாதவர்கள் உட்பட பலரும் தொடர்ந்து மறைந்து வாழ்ந்து வருகின்றார்கள். இதனால் அவர்களது அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் வேலைக்கு செல்ல முடியாதுள்ளதோடு அவர்களுடைய பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையும் காணப்படுகிறது. அத்துடன் குறித்த சம்பவத்தில் பொலிசாரினால் தாக்குதலினால் படு காயங்களுக்கு உள்ளாகியுள்ள பலரும் சிகிச்சை பெற முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் பொலிசாரும், புலனாய்வுத் துறையினரும் குறித்த பெண்களின் புகைப்படங்களைக் காட்டி அவர்களை கைது செய்தால் தங்களுடன் மூன்று நாட்கள் வைத்திருந்த பின்னர்தான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவோம் என அவர்களுடைய உறவினர்களிடம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிசாரின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக கூறப்படும் இடத்தில் இருந்து அயலில் உள்ள வீடுகளில் தஞ்சம் புகுந்த மக்கள் உட்பட குறித்த இடத்தில் இருந்து 400 மீற்றர் தொலைவில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த மக்கள்மீதும் மிலேச்சுத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது மனித உரிமை மீறும் செயலாகும்.
அத்துடன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அங்கும் பொலிசாரினால் தாக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட ஆண்கள் கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றார்கள். என்று அந்த பதிவு தெரிவிக்கின்றது.