காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அனர்த்தங்கள் மற்றும் அவசர சூழ்நிலைகளுக்கு முகங்கொடுப்பதற்கு இலங்கை தயார்நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவசியமான உபகரணங்களை அமெரிக்கா இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் மனிதாபிமான உதவிகளுக்கான பணியகத்தின் நிதியுதவியின்கீழ் ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு இந்த உபகரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. உலக உணவுத்திட்டத்தின் விசேட நடவடிக்கைகளுக்காக அமெரிக்க முகவரகத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2.5 மில்லியன் டொலர் நிதியின் ஒருபகுதியே மேற்குறிப்பிட்ட உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உபகரணங்கள் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் மனிதாபிமான உதவிகளுக்கான பணியகத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய மனிதாபிமான ஆலோசகர் டஸ்ரின் ஷியோவினால் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தின் அதிகாரி டக் சொனெக், ‘உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாப்பதும், அனர்த்தங்களால் மக்கள் மத்தியில் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதுமே அமெரிக்காவினால் இலங்கையிலும், உலகளாவிய ரீதியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதாபிமான அனர்த்த உதவி செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்’ எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு அனர்த்தங்களைத் தடுப்பதற்கும், அவற்றின் தாக்கங்களைக் குறைப்பதற்கும் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கொண்டிருக்கும் இயலுமையை மேம்படுத்தும் நோக்கில் அதன் அதிகாரிகளுடன் தாம் தொடர்ந்து இணைந்து பணியாற்றிவருவதாகவும், இது இலங்கையின் அவசர சூழ்நிலைகளின்போது அவசியமான உதவிகளை வழங்குவது தொடர்பில் தாம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைக் காண்பிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.