இதயம் மற்றும் சுவாச நோய்களுக்குத் தேவையான 12 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளை இலங்கையில் உள்ள கட்டார் தொண்டு நிறுவனம், சுகாதார அமைச்சுடன் இணைந்த அரச வைத்தியசாலைகளுக்கு அண்மையில் நன்கொடையாக வழங்கியது.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 47,000 நோயாளிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அலுவலகத்தின் பணிப்பாளர் மஹ்மூத் அபு கலீபாவின் தலைமையில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டம், நீண்டகால நோய்கள் தொடர்பாக இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடியை தீர்க்கும் என நம்புகிறது.
நோயாளிகளுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கும், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், மனிதநேய விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும் பங்களிப்பதற்காக இந்த நன்கொடை கட்டார் மக்களிடமிருந்து இலங்கை மக்களுக்கு வழங்கப்படுவதாக கட்டார் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன, அமைச்சின் செயலாளர் டொக்டர் பி.ஜி.மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சஞ்சீவ விமலகுணரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.