இஸ்ரேல் – டெல்அவிவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு சொந்தமான கட்டடம் ஒன்றில் ஆளில்லா விமான
தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த கட்டிடத்தின் மீது நேற்று (19) அதிகாலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம், அங்குள்ள இலங்கையர்களைப் பாதுகாப்பாக செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதுதவிர, இலங்கையர்கள் உள்ளிட்ட பலர் தங்கியிருந்த கட்டடம் ஒன்றில் நேற்று இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்தேகத்துக்குரிய சம்பவமொன்றை அடுத்துக் குறித்த கட்டடம் முத்திரையிடப்பட்டுள்ளது.
தற்போது இராணுவத்தினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அங்குத் தங்கியிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள இலங்கையர்கள் நிலவும் சூழ்நிலை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அத்தியாவசியக் காரணங்கள் தவிர்ந்த விடயங்களுக்கு வெளியில் செல்வதைத் தவிர்த்து அவதானத்துடன் செயற்படுமாறும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
தாக்குதல் நடைபெற்ற பகுதியில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.