நாட்டில் பிரச்சினைவந்தால், நாட்டு மக்களுக்கு பிரச்சினைவந்தால் எவ்வாறு தப்பியோடுவது என்பதற்கு எடுத்துக்காட்டே தமிழ் அரசியல்வாதிகள்தான் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மிக உயரமான வெளிச்சவீடுகளில் ஒன்றாகவுள்ள மட்டக்களப்பு முகத்துவாரம் பாலமீன் மடு வெளிச்சவீடு சுமார் 30 வருடங்கள் பின் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று மாலை (20) நடைபெற்றது.
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனால், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சர் ஆகியோருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க கடற்தொழில் அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாநகர சபையினால் புனரமைப்பு செய்யப்பட்டு கையளிக்கப்பட்டதுடன், சுமார் 7.5 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் இது மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
1913 ஆண்டு கட்டப்பட்ட 111வருடங்கள் பழமையான இந்த வெளிச்சவீடானது மீனவர்களின் கடல்கரை விளக்காகவும் ,வெளிநாட்டவர்களின் சுற்றுலா பிரதேச தளமாகவும் காணப்பட்டது.
மாநகர ஆணையாளர் சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற வெளிச்ச வீடு கையளிக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பொறியியலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சிவானந்தராஜா உட்பட மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மீனவ சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.