கொழும்பு துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
கடந்த 19ம் திகதி கோவா கடற்கரையில் இருந்து 102 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.
அபாயகரமான இரசாயனங்கள் அடங்கிய 1,154 கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது, அதன் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டார், மீதமுள்ளவர்களை இந்திய கடற்படை காப்பாற்ற முடிந்தது.
இந்திய கடலோர காவல்படையின் தகவலின்படி, இந்திய கடற்படையின் நான்கு கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தற்போது தீ பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொதுவாக இது போன்ற கப்பலில் ஏற்படும் தீயை முழுமையாக கட்டுப்படுத்த 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும் எனவும் கூறப்படுகிறது.
அபாயகரமான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள கப்பலின் பகுதி தீயினால் சேதம் அடைந்தால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு பதிலளிக்க தயாராக இருக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இந்திய கடலோர காவல்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.