தேர்தலின் போது இலஞ்சம் வழங்கும் குற்றத்திற்காக விதிக்கப்படும் அபராதத்தை 500 ரூபாவில் இருந்து ஒரு மில்லியன் ரூபாவாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டக்கோவையில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலத்தின் ஊடாக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, தேர்தலின் போது இலஞ்சம் வழங்கும் குற்றத்திற்காக விதிக்கப்படும் அபராதம் 200 ரூபாவில் இருந்து 750,000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பின் போது அநாவசிய அழுத்தம் பிரயோகத்திற்கு விதிக்கப்பட்ட 500 ரூபா அபராதம் ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
தேர்தலொன்றில் ஆள்மாறாட்டம் செய்யும் குற்றத்திற்காக இதுவரை 300 ரூபா மாத்திரமே அபராதமாக அறவிடப்பட்டது.
இதனை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிக்க சட்டமூலத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கணக்குகளை தவறவிடுவோருக்கு இதுவரை விதிக்கப்பட்ட 300 ரூபா அபராதம் ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.
இதுதவிர பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பிலும் இதுவரை விதிக்கப்பட்டு வந்த அபராதத்தையும் அதிகரிப்பதற்கு இந்த சட்டமூலத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.