பங்களாதேஷில் குறைந்தது 151 பேர் கொல்லப்பட்ட மாணவர் ஆர்ப்பாட்டத்திற்கு காரணமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் (21) நீக்கியுள்ளது.
அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டை, கீழ் நீதிமன்றம் ஒன்று உறுதி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் மேன்முறையீட்டுப் பிரிவு வழங்கிய தீர்ப்பில், 93 வீதமான அரச வேலை வாய்ப்புகள் தகுதி அடிப்படையிலான அபேட்சகர்களுக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள 7 வீதமான அரசாங்க வேலைகளை 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் சுதந்திரத்துக்காகப் போரிட்டவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் வழங்க அது உத்தரவிட்டது. இதற்கு முன்னர் இந்தப் பிரிவில் உள்ளவர்களுக்கு 30 வீதம் ஒதுக்கப்பட்டிருந்தது.
பங்களாதேஷில் ஒதுக்கீட்டு முறையை ஒழிக்கும்படி ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராடியதன் விளைவாக இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. ஆர்ப்பாட்டத்தின் உச்சக்கட்டமாகத் தலைநகர் டாக்காவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை தொடக்கம் பங்களாதேஷில் இணையதளம் மற்றும் குறுஞ்செய்தி வசதிகள் முடக்கப்பட்டிருப்பதோடு நாடு முழுவதும் வன்முறைகள் அதிகரித்துள்ளன.
கலவரத்தை அடக்க இராணுவத்தினர் களமிறக்கப்பட்ட நிலையில், ஊரடங்கு உத்தரவுகளை மீறும் குழுக்கள் அல்லது நபர்கள் மீது கண்டதும் சுட உத்தரவு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பில் அரசில் இருந்த உடன் எந்த பதிலும் அளிக்கப்படாதபோதும் ஆர்ப்பட்டங்கள் தொடரும் என்று மாணவர் குழு ஒன்று ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் உலகில் வேகமான வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்தபோதும் அது தொழில் வாய்ப்புகளை உருவாக்கத் தவறியுள்ளது.
சுமார் 18 மில்லியன் இளைஞர்கள் அங்கு வேலை இன்றி தவிக்கும் நிலையில், பல்கலைக்கழக பட்டதாரிகள் தங்களை விட குறைவான கல்வியை பெற்றவர்களை விடவும் அதிக வேலையின்மையை எதிர்கொண்டுள்ளனர்.