கோழி இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த வாரம் முதல் கோழி இறைச்சி கொள்வனவை புறக்கணிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் எச்சரித்துள்ளார்.
அத்துடன், பிஸ்கட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த எந்த வழிவகை கையாளப்பட்டதோ, அந்த வழிவகை கோழி இறைச்சி விடயத்திலும் கையாளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், டொலர் மதிப்பிழப்பால் கிடைக்கும் சலுகைகளை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என கோழி இறைச்சி வியாபாரிகளிடம் கோரப்பட்டுள்ளது.
எனினும் தற்போது உள்ள இக்கட்டான சூழலை பயன்படுத்தி அதிக இலாபம் ஈட்ட வியாபாரிகள் முயற்சிக்கின்றனர்.
இதேவேளை, அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், இறக்குமதி செய்யப்பட்ட பழங்களின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஒரு கிலோகிராம் திராட்சைப்பழம் 2,690 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் ஆப்பிள் 2,500 ரூபாவாகவும் விற்பனையாகிறது.
அத்துடன் உள்ளூர் பழ வகைகளின் விலையும் அதிகரித்துள்ளது என்று அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.