இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று நாரஹேன்பிட்டை அபயாராம விகாரையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இலங்கையில் தாதியர் பல்கலைக்கழகமொன்று நிர்மாணிக்கப்பட வேண்டும் என்பதில் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மிகவும் கடுமையான முன்னெடுப்புகளை மேற்கொண்டிருந்தார்.
தற்போதைக்கு தாதியர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சாத்தியம், அதன் சாதக, பாதகங்கள் குறித்து கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றது.
மிக விரைவில் பல்கலைக்கழகம் ஒன்றைத் தாபிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
இந்நாட்டின் சுகாதார நிலையை மேம்படுத்த எதிர்வரும் நாட்களில் பல்வேறு பிரதேசங்களை மையப்படுத்தி 100 ஆரம்ப சுகாதார நிலையங்களை நிறுவவும் உத்தேசித்துள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.