கொழும்பு, கிராண்ட்பாஸ், வதுள்ளவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த இருவர், ‘கிராண்ட்பாஸ் குடு சுனீதா’ மற்றும் அவரது உதவியாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இருவரும் பாரிய போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றுமுன்தினம் மாலை 5.50 மணியளவில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து உடனடியாக தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று (26) காலை உயிரிழந்துள்ளதுடன், இவரது உதவியாளரான 31 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கே. சுனீதா என்றழைக்கப்படும் குறித்த பெண் பாரியளவிலான போதைப்பொருள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், “யுக்திய” போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் ஆரம்பத்திலிருந்து பிடிபடாமல் தப்பித்து வருவதாகவும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பான பல நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிதாரிகளால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒருகொடவத்தையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், ரிவோல்வரை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் வியாபாரிகளின் நடவடிக்கைகளில் அவர் தலையிட்டதன் காரணமாக, போதைப்பொருள் வியாபாரிகள் இந்தக் கொலையை திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.