முகக் கண்ணாடியைப் பார்க்கும் போது நாட்டுக்குப் பொருத்தமான தலைமைத்துவம் தனக்குத் தென்படுவதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பூகொடை – மண்டாவல கிராமத்தில் நேற்று (13.06.2023) நடைபெற்ற ரணவிரு அஞ்சலி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், இப்போது அனைவருக்கும் பாதுகாப்புப் படையினரை மறந்துவிட்டது. அவர்களின் பங்களிப்புகள் மறந்துவிட்டது.
இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றதையே பலரும் மறந்துவிட்டார்கள். வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படுவதில் சிக்கல்கள் இருக்கின்றன.
அவற்றை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய விடுவிக்கப் போனால் பாதுகாப்பு குழறுபடிகள் ஏற்படும்.
தேவையற்ற காணிகளை விடுவிக்கலாம். ஆனால் எல்லாக் காணிகளையும் விடுவிக்க முடியாது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லவர். ஆனால் வல்லவர் கிடையாது.
அடுத்த தேர்தலில் அவருக்கு ஆதரவளிக்க மாட்டேன். பலரும் நான் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையா என்று கேட்கின்றார்கள்.
நானும் தினந்தோறும் முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்க்கும் போது நாட்டுக்குப் பொருத்தமான தலைமைத்துவத்தை காண்கின்றேன்.
ஆனால் பொதுமக்களும் சிவில் அமைப்புகளும் இணைந்து வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கும் பட்சத்தில் தான் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைக் குறித்து சிந்திக்க முடியும் என்றும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.