ஆசிரியர்கள் இடமாற்றத்திற்காக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் ஜனாதிபதியினால் நடவடிக்கையெடுக்கப்பட்டு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களை இணைக்கும் முகவர்கள் இணங்காணப்பட்டு நடவடிக்கையெடுக்கப்படவேண்டும் என இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் ஜீவராசா ருபேஷன் தெரிவித்தார்.
மட்டு. ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அண்மைக்காலத்தில் இசுரூபாயவில் இருக்கின்ற கல்வி புலத்திலே இருக்கின்ற பெரிய அதிகாரி ஒருவர் லஞ்ச குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றார். இது தொடர்பாக அண்மையில் கூட சிங்கள நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தனர்.
இரண்டு ஆடுகளை பெற்றுக் கொண்டு ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கியதாக இந்த நாளிதழிலே செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதியின் ஊடாக உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இந்த அதிகாரி நிறுத்தப்பட்டு இருக்கின்றார்.
எனினும் இந்த அதிகாரியினையும் ஆசிரியர்களையும் இணைக்கின்ற முகவர்கள் யார்? ஒரு ஆசிரியர் நேரடியாக சென்று அதிகாரியுடன் கதைத்து இலஞ்ச ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுவது மிக மிக குறைவு.
இதனை இணைக்கின்ற ஒரு முகவர்களாக செயல்படுகின்றவர்கள் இன்னமும் இந்த சமுதாயத்திலே தொடர்ச்சியாக அவர்கள் இவ்வாறான செயல்களிலே ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றார்கள்.
எனவே ஒரு பிரச்சனை ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் அந்த பிரச்சினைகள் தொடர்பாக தொடர்ச்சியாக ஆராய்ந்து அதில் யார் தொடர்புபட்டிருக்கின்றார்கள்? எவ்வாறானவர்கள் தொடர்பாட்டிருக்கின்றார்கள் என்கின்ற அனைத்து விடயங்களையும் எடுத்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இந்த அதிகாரிகள் மாத்திரம் அல்ல பல இடங்களில் இவ்வாறான ஆசிரியர் இடமாற்ற சபைகளிலே பல முரண்பாடுகள் மற்றும் நீதிக்கு முரணான செயல்பாடுகள் மூலமாக ஆசிரியர்கள் இடமாற்றப்படுகின்ற சந்தர்ப்பங்கள் இடம்பெற்றுகின்றது.
எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தொடர்ச்சியாக இந்த ஊழல் நடவடிக்கையினை அனுமதிக்காது உடனடியாக நிறுத்துகின்ற வகையிலே திட்டத்தின் ஊடாக சரியான முறையில் விசாரணைகளை நடத்தி அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் சம்பவங்கள் அதேபோன்று எங்களது கடந்த காலங்களில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் நிதியை கேட்டு போராடிய பொழுது அனைத்து விடயங்களையும் இவர்கள் வெளிக் கொண்டு வந்திருந்தார்கள்.
இது மட்டுமின்றி கல்வியில் இருக்கின்ற பல பிரச்சினைகளை இந்த ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றது அவ்வாறு வழி கொண்டு வருகின்ற போது அரசாங்கத்திற்கு மாபெரும் தலையிடியாக இருக்கின்றது அதாவது அனைத்து விடயங்களுக்கும் சமூகத்திற்கும், சர்வதேசத்திற்கும் கூட ஊடகத்தின் ஊடாக வெளிக்கொண்டு வருகின்றது. இதனால் அரசாங்கத்தினால் தவறான செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்ய முடியாத இக்கட்டான நிலையிலே ஊடகங்களை அடக்குகின்ற செயல்பாட்டினை இன்று கைகொண்டிருக்கின்றது.
அதற்காகவே ஒளிபரப்பு அதிகார சபை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் என்கின்ற ஒரு விடயத்தினை கொண்டு வந்து ஊடகங்களினுடைய சுதந்திரத்தினையும் ஊடகங்கள் ஊடாக குரல்களை கொடுக்கின்றவர்களின் சுதந்திரதினையும் அடக்குகின்ற செயற்பாடுகளிலே இவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான ஒரு செயற்பாட்டினை ஆசிரியர் தொழிற்சங்கம் என்கின்ற அடிப்படையில் நாட்டிலேயே எங்களுடைய யாப்பிலே வழங்கப்பட்டிருக்கின்ற உரிமையின் அடிப்படையில் எங்களுடைய கருத்து சுதந்திரத்தை மாறுகின்ற ஒரு செயற்பாடாகவும் நாங்கள் காண்கின்றோம். எனவே ஊடகங்களுக்கு எதிரான இந்த அடக்குமுறை சட்டம் மூலத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.
நாட்டில் பல அரச துறைகள் குறுகிய கால லாபத்திற்காக அதாவது குறிய காலத்தில் அரசாங்கம் நமது நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற பொருளாதாரத்தினை நிவர்த்தி செய்யப்பட்டு எதிர்காலத்தினை கருத்தில் எடுக்காமல் இன்றைய காலத்திலே பல அரச நிறுவனங்களை தனியார் நிறுவனங்களாக்குகின்ற செயற்பாடுகளையும் செய்து கொண்டும் வருகின்றனர்.
இது எதிர்காலத்திலே கல்வியிலும் வந்து முடியக்கூடிய நிலை காணப்படுகின்றது உதாரணமாக கல்வி புலன்களில் கூட தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கக்கூடிய நிலைக்கு சென்று விடக்கூடிய அபாயம் இருக்கின்றது. எனவே இன்றைய காலகட்டத்திலே அரசாங்கம் கொண்டு வருகின்ற இந்த தனியார் மயப்படுத்தப்படுகின்ற சட்டத்திற்கு நாங்கள் எதிராக குரல் கொடுக்க தயாராக இருக்கின்றோம்.
காரணம் எதிர்காலத்திலே எமது கல்வி புலத்தினுடைய சுதந்திரத்தையும் கல்வி தனியார் மயமாக்கப்படுதலையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிட்டு எதிர்காலத்தையும் நீண்ட கால அடிப்படையில் சிந்தித்து செயல்பட்டு செல்ல வேண்டும்.
ஆசிரியரிடமாற்றம் சபையின் ஊடாக இடமாற்றம் செய்யப்படுவதனைத் தாண்டி பல வலயங்களினால் சமப்படுத்தல் என்கின்ற ஒரு திட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் இது ஒரு ஒழுங்கான திட்டமிடலின் அடிப்படையில் செய்யப்படுகின்ற இடமாற்றம் அல்ல. இங்கு வலயங்களுக்கு வேண்டப்படாத ஒரு ஆசிரியர் வேணுமென்றவாறு இடமாற்றம் செய்யப்படுகின்றார்.
இதற்கு பல இடங்களில் பல அரசியல்வாதிகள் உடைய சிபாரிசு கடிதங்களை வழங்கி தங்களுக்கு தேவையான ஆசிரியர்களுக்கு கூட குறித்த இடங்களுக்கு கூட இடமாற்றி தாருங்கள் என்கின்ற விடயங்கள் கூட வழங்கி இருக்கின்றார்கள்.
எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைக்கு சரியான ஒரு தீர்வை கிடைக்காவிட்டால் அனைவருடைய பெயர்களையும் குறிப்பிட்டு நாங்கள் ஊடகங்களுக்கும், சமூகங்களுக்கும், மனித உரிமை திணைக்களத்திற்கும் அனைத்து விடயங்களுக்கும் நாங்கள் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சமர்ப்பிப்போம் என்கின்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன் என்றார்.