இந்திய தலைநகர் டெல்லியில் கனமழையில் சிக்கி இரு மாணவிகள், ஒரு மாணவர் என மொத்தம் மூவர் உயிரிழந்ததையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக டெல்லி பழைய ராஜிந்தர் நகரில் இயங்கிவரும் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீர் புகுந்ததால் நேற்று முன்தினம் (27) 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதற்கிடையில், 3 மாணவர்களை தவிர மற்ற மாணவர்கள், வெளியில் இருந்த மாணவர்களின் உதவியுடன் வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் வெளியேற முடியாத இரு மாணவிகள் ஒரு மாணவர் என 3 மாணவர்களின் உடல்களும் பலமணி நேர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்டது.
இரு வாரங்களுக்கு முன்பாகவே இந்த கட்டடத்தில் வடிகால் அமைப்பு மோசமாக உள்ளதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாணவர்கள் புகாரளித்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து டெல்லியில் உள்ள அனைத்து பயற்சி மையத்தையும் ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது
உயிரிழந்த மூன்று மாணவர்கள், உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரேயா யாதவ், தெலுங்கானாவை சேர்ந்த தன்யா சோனி மற்றும் கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த நிவின் டால்வின் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேசமயம் இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு டெல்லி கரோல் பாக் மெட்ரோ ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். மேலும் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் தற்பொழுது டெல்லியின் மேயர் ஷெல்லி ஓப்ராயின் இல்லத்தை முற்றுகையிட்டு ஏபிவிபி மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலிசார் தடியடி நடத்தி மாணவர்களை கலைக்க முயன்றுள்ளனர். இதனால் டெல்லியில் பதற்றம் தொற்றியுள்ளது.