கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன நினைத்திருந்தால் அமைச்சர் பதவியைப்பெற்றுக்கொண்டு அரசியலுக்குள் இருந்திருக்கலாம். ஆனால் அவர் இனவாதத்திற்குள் தன்னை ஆட்படுத்தாமல், ஒடுக்கப்படும் சிறுபான்மை சமூகத்திற்கு தொடர்ச்சியாக குரல்கொடுத்துவந்ததாக இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தெரிவித்தார்.
இடதுசாரி கொள்கையுடன் நீண்டகாலம் பயணித்து அண்மையில் மரணமான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்னவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று (28) மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பில் உள்ள தமிழரசுக்கட்சியின் அலுவகத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் தலைவர் தீபாகரன், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் து.மதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கலாநிதி விக்ரமபாகு கருணாரட்னவின் உருவப்படத்திற்கு முன்பாக ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது