பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது நேற்று முன்தினம் மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், உயிரிழந்த இளம் தாய் மரியராஜ் சிந்துஜா என தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த இளம் தாய்க்கு முதலாவது ஆண் குழந்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 09ம் திகதி பிறந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 11ம் திகதி மருத்துவமனையில் இருந்து தாய் சேய் நலமாக வெளியேறியுள்ளார்கள்.
இதனையடுத்து, 7 நாட்களின் பின்னர் முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டுமாறு கூறியதையடுத்து கடந்த 16ம் திகதி முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டப்பட்டதாக உயிரிழந்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.
இதன்போது, குறித்த பெண் தனது தாயாரால் பராமரித்து வந்துள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை (27) குருதிப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அன்று இரவு நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று ஓ.பி.டி பதிவுகளின் பின்னர் உரிய நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குருதி ஓட்டம் கட்டுப்படாமல் தொடர்ச்சியாக கசிந்து கொண்டே இருந்ததன் காரணத்தினால் அதிகாலை ஆறு முதல் ஏழு மணி அளவில் சுயநினைவை அவர் இழந்ததாக தாயார் கூறியுள்ளார்.
அதன்பின், அவசர சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட போது நண்பகல் 11 மணியின் பின்னர் இளம் தாய் மரணித்து விட்டதாக தெரியவந்துள்ளது.

குருதிப் பெருக்கு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அன்று இரவு வைத்தியர்கள் பார்வையிட்டு இருந்தால் தனது மகளை காப்பாற்றியிருக்கலாம் என இந்த பெண்ணின் தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இறந்த இளம் தாயான சிந்துஜா சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்து பட்டமளிப்பு நிகழ்வு இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக சடலப் பரிசோதனை நேற்று (29) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதிக குருதிப் பெருக்கு காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளதாகவும், மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்பாகங்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மரணம் தொடர்பான பரிசோதனை அறிக்கை வெளிவந்தால் மரணத்திற்கான காரணத்தை முழுமையாக அறிய முடியும் என்றும் வைத்தியசாலை தரப்பினர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.