கலாசார மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உடனடியாக பதவி விலகவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
அண்மையில் ஜனாதிபதியுடனான கூட்டத்திலே தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர், கூட்டங்களிற்கு வருகை தரும் வேளைகளில் நாம் தவறு செய்துள்ளோம், தவறு நடந்துள்ளது, அதனை நாம் நிவர்த்தி செய்வோம் என்று தொடர்ச்சியாக குறிப்பிடும் வேளைகளில் ஜனாதிபதி அவற்றை நிவர்த்தி செய்யுமாறு கூறுவார்.
அண்மையில் ஜனாதிபதியுடனான கூட்டத்திலே தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் முல்லைத்தீவு மாவட்டத்திலே ஒரு தொல்பொருள் திணைக்களம் சுவீகரித்த காணிகளை மீண்டும் விடுவிப்பதற்கான கடிதத்தினை தானே பின்வாங்கி இன்னுமொரு கடிதம் அனுப்ப முடியாது என்று கூறினார்.
அதனால் ஜனாதிபதி அந்த கடிதத்தினை அனுப்ப முடியாது விடில் உங்களுடைய ராஜினாமா கடிதத்தினை தருமாறு கேட்டுக்கொண்டதுடன் வரலாறு தொடர்பாக வகுப்பு ஒன்றையும் எடுத்திருந்தார்.
இதில் ஜனாதிபதிக்கு கூற வேண்டிய விடயம் என்னவென்றால், இவை அனைத்திற்கும் பொறுப்பானவர் மிகவும் இனத்துவேஷம் பிடித்த முன்னாள் பிரதமர் ரட்னஸ்ரீ விக்கிரமநாயக்கவின் மகன் விதுர விக்கிரமநாயக்க ஆவர்.
பணிப்பாளரிற்கு இவ்வாறாக அச்சுறுத்துவதை விட அவரை இவ்வளவு காலமும் தவறான பாதையிலே வழிநடத்தி அவருக்கு பின்னால் நின்ற விதுர விக்கிரமநாயக்க இந்த கூட்டத்திற்கு அழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என நான் அந்த இடத்திலே கூறினேன்.
குறிப்பாக குறுந்தூர் மலையிலே இராணுவத்துடன் சென்ற விதுர விக்கிரமநாயக்கவே அந்த பிரச்சினையின் கதாநாயகராக இருந்தவர்.
மட்டக்களப்பு மாவட்ட மலைக்கு அவர் வந்த வேளை பாரிய எதிர்ப்பிற்கு மத்தியில் அவரை விரட்டி அடித்தோம். இதனால் தான் தொல்பொருள் திணைக்களத்தின் தொல்லைகள் குறைவாக உள்ளது. இருப்பினும் அவை காணப்படுகின்ற போதிலும் அவற்றை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
ஆனால் ஜனாதிபதி இதுவரைக்கும் விதுரநாயக்கவை ஏன் கண்டிக்கவில்லை? உண்மையை சொன்னனால் அவரை பதவியில் இருந்து விலக்க வேண்டும். ஏனெனில் அவரே தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளரிக்கு ஆலோசையும் நிதியையும் வழங்கினார். அத்துடன் இராணுவ தலையீட்டுடன் இந்த விடங்களையும் நேரடியாக செய்தார்.
அந்த இடத்தில் பணிப்பாளர் நாயகத்திடம் ராஜினாமா கடிதத்தினை தாருங்கள் என கேட்டது ஒரு விடயமாக இருப்பினும் அதற்கு மூல காரணம் விதுர விக்கிரமநாயக்கவே.
இன்று இதையடுத்து பலர் ஜனாதிபதி ஆக்கபூர்வமான முடிவினை எடுத்துள்ளதாக கூறியுள்ளனர். ஆனால், இன்னும் அந்த கபினட் அமைச்சர் உள்ளார்.
நாளை இந்த ஜனாதிபதி இல்லாது போனால் இந்த கபினட் அமைச்சர் புதிய பணிப்பாளரை வைத்து அனைத்தையும் நடத்துவார். ஆகவே நிரந்தர தீர்வு கிடைக்கப்பெறும் வரையில் எந்தவொரு விடயத்தினையும் பார்த்து நாம் திருப்தி அடைய முடியாது.
இந்த முடிவானது வெறுமனே எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதி தேர்தல் வருமாயின் அதில் மக்களின் ஆதரவினை பெறுவதற்காகவே எடுக்கப்பட்டுள்ள முயற்சியாகும். மாறாக உண்மையாகவே இதற்கு அவர் தீர்வு எடுப்பாராயின் இனவாதியான விதுர விக்கிரமநாயக்கவை பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும்.
நான் ஒரு நாள் பாராளுமன்றத்தில் பேசிய போது விதுர விக்கிரமநாயக்கவிடம் நீங்கள் தானே இவற்றிற்கு மூலகாரணம் என கூறிய போது இதனை பரிசாக எடுக்கின்றேன் என அவர் கூறியிருந்தார்.
அவர் செருப்பு போடாமல் இருப்பதால் மட்டும் புண்ணியவான் ஆகிடவோ அல்லது நல்வர் ஆகிடவோ முடியாது.
தமிழ் மக்களிற்கு துரோகம் செய்து அவர்களின் காணியை பறிப்பதும், சிவன் ஆலயத்தை உடைத்தெறிந்து விட்டு அதில் இன்னொரு மத ஆலயத்தை அமைப்பது போன்ற குற்றங்கள் கடவுளுக்கே பொறுக்காது எனவும் தெரிவித்தார்.