பேச்சுவார்த்தைகளின் ஊடாக தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வை பெறுவதற்காக வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய சூழலை நாங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
ஒரு சிலர் இந்த தமிழ் பொது வேட்பாளரை வைத்துக்கொண்டு தங்களுடைய பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து தங்களுடைய கட்சி பிரபல்யமாக்கலாம் என ஒரு சிலர் இருக்கின்றார்கள், இன்னும் ஒரு சிலர் இதை பணம் உழைக்கும் ஒரு சந்தர்ப்பமாக பார்க்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் புனரமைக்கப்பட்ட ஆலயங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதேமேற்கண்டவாறு அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மிக விரைவாக ஒரு ஆட்சி மாற்றம் நடைபெற இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கின்றது. எவர் ஜனாதிபதியாக வந்தாலும் இந்த மாவட்டத்தில் இருக்கும் நிலைமைகள் மாற வேண்டும். அதாவது தற்போது இந்த மாவட்டத்தில் இருக்கின்ற ஊழல் மோசடி செய்கின்றவர்களை அகற்றி, வரும் காலங்களில் மக்கள் சுத்தமான கரங்கள் உள்ள மக்களுடன் சேர்ந்து, மக்களுடைய தேவையை பூர்த்தி செய்யக் கூடியவர்களை நாங்கள் தெரிவு செய்ய வேண்டும்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஒரு சிலரை தவிர பல கோமாளிகள் போட்டியிடுவதை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இன்று உள்ளூராட்சி சபை தேர்தல்களில், வட்டாரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை போன்று ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் காணப்படுகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலை யார் கேட்க வேண்டும் என்கின்றதற்கான வரைவிலக்கணம் கூட இல்லாத நிலைக்கு இன்று வேடிக்கையான நிலைக்கு இந்த நாட்டின் நிலைமை காணப்படுகின்றது.என்று மேலும் தெரிவித்த அவர் விளையாட்டுக்கழகங்களுக்கு சாணக்கியனின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்களும் வழங்கிவைத்தார்.