வரலாற்றுச் சிறப்புமிக்க குருந்தி அல்லது குருந்தூர்மலை விகாரைக்கு சொந்தமில்லாத சுற்றுப்புறக் காணிகளை தமிழ்மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு அதிபர் ரணில் வழங்கிய உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொல்பொருள் ஆய்வாளர் வணக்கத்துக்குரிய எல்லாவல மேதானந்த தேரர் நேற்று முன்தினம் (13) அதிபருக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குருந்தி விகாரையை சூழவுள்ள காணிகள் இனவாதப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் மக்களின் கைகளுக்குச் சென்றால் எதிர்காலத்தில் அந்தப் பிரதேசம் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என அக்கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘
குருந்தி விகாரைக்குச் சொந்தமில்லாத காணியை பொதுமக்களுக்கு வழங்குமாறு அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்டேன். குருந்தி விகாரையைச் சுற்றிலும் பல்வேறு புத்த மடாலயங்களின் இடிபாடுகள் பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன.
எனவே, இந்த நிலங்களை தமிழருக்கு பகிர்ந்தளிப்பது ஏற்புடையதல்ல. மேலும், பௌத்த விகாரைக்கு அருகில் போராட்டங்களை ஆதரிக்கும் மக்களுக்கு காணி வழங்குவது ஏற்புடையதல்ல.இதன் மூலம் பௌத்த இடிபாடுகளுக்கு அருகில் போராட்டங்களை ஆதரிக்கும் குடியிருப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதும் அந்த நிலத்தை அரசு கொடுத்ததோ இல்லையோ வலுக்கட்டாயமாக அபகரித்து விட்டதாகவே தெரிகிறது. எனவே இந்த காணிகளின் உரிமையை மாற்றக்கூடாது எனவும் எதிர்காலத்தில் பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடும் எனவும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.