கேம் ஆஃப் திரோன்ஸ் (Game Of Thrones) தொடரில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயரை சிறுமிக்கு வைத்ததால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் தொலைக்காட்சி தொடரான கேம் ஆஃப் திரோன்ஸ் (Game Of Thrones), கடந்த 2011 -ம் ஆண்டு முதல் HBO தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பானது. இந்த தொடரில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும்.
அதிலும், முக்கியமான பெண் கதாபாத்திரத்தில் வருபவர் கலீஸி. தற்போது, இந்த பெயரை வைத்த 6 வயது சிறுமிக்கு பாஸ்போர்ட் (Passport) வழங்க மறுக்கப்பட்ட சம்பவம் தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனை சேர்ந்த லூசி என்பவர் தனது 6 வயது மகளுடன் பாரீஸில் உள்ள டிஸ்னி லேண்டில் தன்னுடைய விடுமுறையை கொண்டாட திட்டம் செய்துள்ளார். ஆனால், பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து வந்த பதிலால் அந்த கனவு சிதைந்துள்ளது.
இவருடைய மகளின் பெயர் கலீஸி. இந்த பெயர் கேம் ஆஃப் திரோன்ஸ் (Game Of Thrones) தொடரின் வரும் என்பதால் அவருடைய பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்தது.
இதனை கேட்ட லூசி அதிர்ச்சி அடைந்தார். கேம் ஆஃப் திரோன்ஸ் (Game Of Thrones) அவர்களது பொருட்களுக்கும், கதைக்கும், மட்டுமே உரிமையுற்றவர்கள். கதாப்பாத்திரத்தின் பெயர்களுக்கு அவர்கள் உரிமை கோரவில்லை என்று வழக்கறிஞர் மூலமாக பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு லூசி பதில் அளித்தார்.
அதற்கு அவர்களது தரப்பில், வெப் தொடரின் உரிமையாளரான வார்னர் ப்ரோஸிடம் இருந்து கலீஸி என்ற பெயரை உபயோகிக்கலாம் என்ற அனுமதி கடிதத்தை கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த லூசி தனது சமூக வலைதளபக்கத்தில், “எனது மகளுக்கு பிறப்பு சான்றிதழை வாங்கும் போது வராத பிரச்சனை இப்போது ஏன்? அப்போதே சான்றிதழ் தர மறுத்திருக்கலாமே” என்று கூறியிருந்தார்.
இந்த பதிவு வைரலான நிலையில் லூசியை தொடர்பு கொண்ட அதிகாரி தங்களது செயலுக்கு வருந்துகிறோம் என்று கூறியுள்ளார். மேலும், உங்களது மகளின் பாஸ்போர்ட் பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.